ஜூன் 3: அமெரிக்கா- ஈரான் போரை காரணம் காட்டி இந்திய அளவில் தற்போது உரங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 50 கிலோ பாக்டாம்பாஸ் விலை தற்போது ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது. பொட்டாஷ் விலை ரூ.275ம், அம்மோனியம் சல்பேட் விலை ரூ.200ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உரங்கள் விலை ஒருபுறமிருக்க, மறுபுறம் உர விற்பனையாளர்களும் இதை கருத்தில் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கார் சாகுபடியை தொடங்க திட்டமிட்டுள்ள விவசாயிகள் உர விலை உயர்வால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது. உரங்களை விற்பனை முனைய (பி.ஓ.எஸ்) இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு யூரியா உரங்களை தேவைப்படும் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யக் கூடாது. யூரியா உரங்களை விற்பனை செய்யும்போது பட்டியலில் விவசாயி முகவரி மற்றும் விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் விவசாயியின் கையொப்பம் பெற வேண்டும். உர விற்பனை நிலையத்தில் உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் பராமரிக்க வேண்டும். எப்பொழுதும் விற்பனை நிலையத்தின் இருப்பு விவரங்கள் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொட்டாஷ் போன்ற உரங்களின் அதிகபட்ச விலைகள் தற்பொழுது மாற்றப்பட்டு வருவதால் புதிதாக வரும் உரம் மூடைகளை தனியாக பராமரிக்க வேண்டும். உரமூடையில் உள்ள அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாயமாக உர விற்பனையை கண்காணிக்க அந்தந்த வட்டார உர ஆய்வாளர் கடையை தினமும் ஆய்வு செய்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. உர விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியலை வைத்த பராமரிப்பதோடு, அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது.
