செங்கல்பட்டு, ஜூன் 3: செங்கல்பட்டு அருகே ரயில்வே தண்டவாளத்தையொட்டி காட்டு பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உதயம்பாக்கம் கிராமப் பகுதியில் நேற்று உள்ளூர் மக்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது, ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள காட்டு பகுதியில் சிதறிய நிலையில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீசார் முழுமையாகக் கைப்பற்றினர். மேலும் தடயவியல் துறை நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சில முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு அது ஆணா, பெண்ணா? எவ்வளவு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற விபரங்களை அறிவதற்காக மரபணு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
