துவரங்குறிச்சி, ஜூன் 3: துவரங்குறிச்சி காமாட்சி அம்மன் கோயில் அருகே தீயணைப்பு வீரர்களிடம் சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சிக்கியது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் வேலைபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திடீரென அப்பகுதிக்கு வந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை கண்டு பணியாளர்கள் ஓட்டம் பிடித்தனர். உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் சிறப்பு நிலை அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பினை சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பு பாம்பு பிடிப்பான் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட நல்ல பாம்பினை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
