வீரவநல்லூர் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் பரபரப்பு: குப்பை கழிவுகளால் தீ விபத்து

ஜூன்3: சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் குப்பை கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை-செங்கோட்டை வழித்தடத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக அதிகஅளவு பயணிகள் வந்துசெல்லும் பகுதியாக சேரன்மகாதேவி ரயில் நிலையம் திகழ்கிறது. சேரன்மகாதேவியில் 30க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், பள்ளி கல்லூரிகள் அதிகஅளவில் இருப்பதால் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலைய வளாகத்தில் சேகரிப்படும் குப்பைகளை போட்டு வைக்க வெளிப்புறம் குப்பை தொட்டிகள் ஏதும் இல்லாததால் மதில் சுவர் அருகில் மொத்தமாக குப்பைகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி அருகிலிருந்த வேப்பமரக்கிளை வரை சென்றது. தீ பற்றிய இடத்திலிருந்து 30 அடி தூரத்தில் மின்சார ரயிலுக்கான மின்கம்பிகள் சென்றதால் அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுபோன்று அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரயில் நிலையம் வெளிப்புறம் குப்பை தொட்டிகள் அமைத்து, அதில் ரயில் நிலைய குப்பைகளை ஊழியர்கள் முறையாக அதில் இடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: