திண்டுக்கல்லில் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

 

திண்டுக்கல், ஜூன் 2: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ராமசாமி முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத தமிழக அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் பயிர் கடன் பெற்றுள்ளனர்.

92 சதவீத விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக உள்ள சூழ்நிலையில் அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விவசாயிகள் 5000 பேர் மட்டுமே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது தமிழக அரசு அறிவித்த 2025 ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026 ஆண்டு பிப்.28ம் தேதி வரை காலக்கெடு விதித்திருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த பாரபட்சமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நஷ்டம் அடைந்ததால், பயிர் கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால் அரசு, கூட்டுறவு பயிர் கடன்களை 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து குடகனாறு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி கூறியதாவது: தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 தள்ளுபடி செய்யபடும் என அறிவித்துள்ளார். அதுவும் கடந்த மே மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் பாதிக்கக்கூடிய அறிவிப்பாக இது உள்ளது. விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் விவசாயத்தை விட விளையாட்டு கடுமையாக கடுமையானது என பேசிய பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

Related Stories: