மண்டபம், ஜூன் 4: மண்டபம் கடலோரக் காட்டு பகுதியில் ஒரு வாரமாக பொதுமக்களை மிரட்டி சுற்றி திரிந்த காட்டு எருமையை மயக்க மருந்து செலுத்தி வனச்சரக அதிகாரிகள் நேற்று பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்குப் பகுதியான மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலோரக்காட்டு பகுதிகளிலும் ராமநாதபுரம் நகர் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக காட்டு எருமை ஒன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக சுற்றி திரிந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்த காட்டு எருமையை பிடிப்பதற்கு வனச்சரக அதிகாரிகள் ஒரு வாரமாக போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று மண்டபம் காந்திநகர் பகுதியில் காட்டு எருமை வந்ததாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனச்சரக அதிகாரிகள் அங்கு குவிந்தனர். அதன் பின்னர் காட்டு எருமைக்கு பல மணி நேரம் போராடி ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். அதன் பின்னர் கூண்டில் அடைத்து வாகனத்தில் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
