ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

 

விழுப்புரம், ஜூன் 2:விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். அப்போது மனு அளிக்க வந்த ஒரு குடும்பத்தினர் திடீரென்று ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் தன் உடல் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஆமூரை சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி அஞ்சலாட்சி மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அஞ்சலாட்சி கூறுகையில், எனது மாமானார் குப்பர் என்பவர் பெயரில் 10 சென்ட் இடம் உள்ளது. அதேபோல் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருக்கு 10 செண்ட் இருந்தது. எங்கள் இருவரின் பட்டா இடத்திற்கு நேராக மந்தைவெளி புறம்போக்கு இடம் உள்ளது. அந்த புறம்போக்கின் வழியாகத்தான் அவரவர் வீட்டிலிருந்து ரோட்டிற்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் தங்கராசு என்பவர் சுமார் 20 வருடத்திற்கு முன்பு அவரின் பட்டா இடத்தை 2 பேருக்கு தலா 5 சென்ட் வீதம் கிரையம் செய்து கொடுத்து விட்டார். அருகில் இருந்த மந்தைவெளி புறம்போக்கின் ஒருபகுதியையும் பதிவு செய்யப்படாத ஆவணங்கள் மூலம் மூன்றாம் நபர்களுக்கு விற்று விட்டு ரோடு அருகே உள்ள மந்தைவெளி புறம்போக்கில் அவர் வீடுகட்டி குடியிருந்து வருகிறார். எங்கள் பட்டா இடத்திற்கு நேராக உள்ள மந்தைவெளி புறம்போக்கையும் அவருக்கு சொந்தமானது என்று சொல்லி உரிமை கொண்டாடி 6 மாதத்திற்கு முன்பு அதில் வளர்ந்து இருந்த மரங்களையும் வெட்டினர்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைலயத்தில் புகார்அளித்து நிலுவையில் இருக்கிறது. எனவே அரசுக்குசொந்தமானஇடத்தை எந்தவிதத்திலும் சம்மந்தமே இல்லாத தனிநபர் உரிமை கொண்டாடி வருவதை தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து போலீசார் ஆட்சியரிடம் மனுஅளிக்கவும், இதுபோன்ற முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

 

Related Stories: