×

சிங்கப்பெண் அதிரடிப்படை காவலருக்கு டார்ச்சர் விவகாரம்: பெண் போலீஸ் கணவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இன்ஸ்பெக்டர்

உடன்குடி: சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்ற பெண் காவலருக்கு டார்ச்சர் அளித்த இன்ஸ்பெக்டர், அவரது கணவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பணி மாறுதலாகி வந்தார். காவல் துறை உயரதிகாரிகள், போலீஸ் யூனிபார்மில் சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது என உத்தரவிருந்தும் இவர் எதையும் பொருட்படுத்தாமல் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளார்.

சினிமா பாணியில் அதிரடி போலீசாக தன்னை காட்டிக்கொள்வதில் முக்கியத்துவம் அளித்துள்ளார். கஞ்சா கடத்துபவர்களை பிடித்து வழக்கு பதிந்து வந்தார். இந்நிலையில் இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச மேசேஜ் அனுப்பியதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது தமிழ்நாடு அரசின் ‘‘சிங்கப்பெண் அதிரடிப்படை’’யில் இருந்த பெண் போலீசுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவரை அந்த பணிக்கு அனுப்பாமல் மாற்றுப்பணிகள் வழங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து பெண் போலீஸ், இன்ஸ்பெக்டர் தனக்கு அளித்து வரும் டார்ச்சர்கள் குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவர், இன்ஸ்பெக்டரிடம் எப்படி மெசேஜ் அனுப்பலாம் என கேட்கவே அவரை தரக்குறைவாக பேச, வாய்த்தகராறாகி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடந்த தகராறின்போது அவரை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார், பெண் போலீசின் கணவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். அவருடன் சென்ற இரு போலீசார், தங்களுக்கு மது வேண்டும் எனக் கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளனர். இதனிடையே தூத்துக்குடிக்கு பணிக்கு சென்ற பெண் போலீசை இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் குறித்த தகவல்களை சேகரித்ததாக தெரிகிறது.

* கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்
இன்ஸ்பெக்டர் – பெண் போலீஸ் விவகாரம், கடந்த சில வாரங்களாக நடந்து வந்துள்ளது. இதுகுறித்து தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் மேலதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். தன்னிடம் இன்ஸ்பெக்டர் முறைகேடாக நடப்பது குறித்து தனிப்பிரிவு காவலரிடம் பெண் போலீஸ் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர், அதிகாரிகளிடம் கூறாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பெண் போலீஸ், மேலதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கவே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் சப்-டிவிஷனுக்குட்பட்ட உயரதிகாரிகளுக்கு இந்த விவகாரம் தெரிந்தும் அமைதி காத்து வருகின்றனர்.

Tags : Lioness Task Force ,Udangudi ,Nagercoil ,Kanyakumari district ,Thoothukudi district ,
× RELATED தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில்...