சென்னை: மத்தியக் கட்டுப்பாட்டு மையமான ‘மின்னகம்’ மூலம் மின் நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க முடியாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திணறி வருகிறது. மின் தடை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பல மணி நேரம் தாமதமாவதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்த சூழலில், தனது தோல்வியை மறைக்கப் பழைய ‘பியூஸ் ஆன் கால்’ திட்டத்தை மின்வாரியம் மீண்டும் கையில் எடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மின் நுகர்வோர் தங்களின் மின் வெட்டு மற்றும் பழுது தொடர்பான புகார்களை 9498794987 என்ற ‘மின்னகம்’ மத்திய உதவி எண் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த அமைப்பால் மின் நுகர்வோரின் அவசரத் தேவைகளைச் பூர்த்தி செய்ய முடியவில்லை. இங்கு பதிவாகும் புகார்கள், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களுக்குச் சென்று, அங்கிருந்து களப் பணியாளர்களைச் சென்றடைவதற்குள் பல மணி நேரம் கடந்துவிடுகிறது.
இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் மின்சாரமின்றித் தவிக்கும் அவல நிலை தொடர்கிறது. ‘மின்னகம்’ அமைப்பின் இந்தத் மந்தமான செயல்பாடே, தற்போது மின்வாரியம் மாற்று வழியைத் தேடக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தற்போது வட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் முதற்கட்டமாக இந்த உள்ளூர் ‘பியூஸ் ஆன் கால்’ எண்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இது குறித்துப் பேசிய நுகர்வோர் ஆர்வலர் தெரிவிக்கையில், ‘‘மாநகரப் பகுதிகளைத் தவிரப் புறநகர்ப் பகுதிகளில் மின்வாரியத்தின் ஒரு பிரிவு அலுவலகம் மிகப் பெரிய பரப்பளவைக் கையாள்கிறது. போதிய ஊழியர்கள் இல்லாததால், உள்ளூர் எண்களைக் கொண்டு வந்தாலும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனே வந்து சேருவது பெரும் சவாலாகவே இருக்கும்\\” எனக் கவலை தெரிவித்துள்ளார்.
மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வப் புகார் அமைப்புகள் தொடர்ந்து சொதப்பி வருவதால், பொதுமக்கள் தங்களின் சொந்த முயற்சியில் மின் ஊழியர்களுடன் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பேசுகையில், ’’மின்னகம் மையத்தையோ அல்லது உள்ளூர் மின்வாரிய அலுவலகத்தையோ போன் மூலம் தொடர்பு கொள்வது எப்போதுமே சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.
வேறு வழியில்லாமல்தான் நாங்கள் ஊழியர்களுடன் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கிப் புகார்களைத் தெரிவித்து வருகிறோம்” என்று மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். மத்திய உதவி எண் தோல்வியடைந்த நிலையில், தற்போது கொண்டு வரப்படும் உள்ளூர் உதவி எண்களாவது முறையாகச் செயல்படுமா அல்லது இதுவும் வெற்று அறிவிப்பாக முடியுமா என்ற அச்சத்தில் மின் நுகர்வோர் உள்ளனர்.
