திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் காயமடைந்த விவசாயிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த குனிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு குனிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தினமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியை 65 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார்.
அங்கு பணியில் ஈடுபட்டபோது அவருக்கு நெற்றியில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விவசாயி குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது பணியில் டாக்டர் இல்லாததால் அங்கிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் விவசாயியின் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
