தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் ரத்து கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க குவியும் மக்கள்

ஊட்டி, மார்ச் 4:  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் ரத்தாகும் என்ற ஆசையில் பலரும் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வருகின்றனர். பொதுவாக தேர்தல் நெருங்கும் சமயங்களில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம். அதேபோன்று இம்முறையும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அ.தி.மு.க. வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்தது. நகைக்கடன் தள்ளுபடி செய்யும் நாட்கள் குறித்து முன்னதாகவே அறிவிக்கப்படவில்லை.

அதேபோன்று தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்தால் நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தது. இதனால், பொதுமக்கள் பலரும் தற்போது கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு தங்களது நகைகளை அடகு வைத்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இதற்கு மேல் வைக்கப்படும் நகைகள் கணக்கில் வராது என பலரும் கேள்வி கேட்டால், அவர்கள் கூறும் ஒரே பதில் நகைக்கடன் தள்ளுபடியில் தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றால் லாபம். இல்லையேல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து உள்ளது.

எனவே, எப்படியும் எங்கள் நகைக்கடன் தள்ளுபடி ஆகி விடும் எனக் கூறி தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் தங்களது நகைகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடகு வைத்து வருகின்றனர். கடந்த 26ம் தேதியில் இருந்து இதுவரை சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான நகைகள் அடகு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: