சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தமிழக ஆளுநரை இன்று காலை திடீரென சந்தித்தனர். அப்போது, குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் தவெக அரசு மீது சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராக பதவியேற்றார். ஆனால், தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல், வெறும் 107 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. இதையடுத்து திமுக கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இ.யூ.மு.லீ. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் பெரும்பான்மையை விஜய் நிரூபித்தார்.
இதில், திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர். அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று விஜய் தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் தனி அணியாக பிரிந்து தவெகவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியினர், கொறடா உத்தரவை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதேபோன்று, எஸ்.பி.வேலுமணி அணியினரும் நாங்கள் நியமித்துள்ள கொறடாவை அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் அடைந்தனர். இரண்டு தரப்பினர் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக சபாநாயகரிடம் 3 நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தனர்.
ஆனாலும், சபாநாயகர் முடிவு அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இந்த நிலையில், தவெக தலைமையிலான விஜய் அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள். அதன்படி மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் எஸ்.எஸ்.இசக்கிசுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த 4 தொகுதியும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, விரைவில் தேர்தல் நடைபெற்றால் இந்த 4 பேரும் மீண்டும் அதே தொகுதியில் தவெகவில் நின்று வெற்றிபெற வைப்பதாக முதல்வர் விஜய் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு இழுக்க குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. இதனால் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் எடப்பாடியை சந்திக்காமல், ஒதுங்கி இருந்து வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அதிமுக எம்எல்ஏ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக எம்பி தனபால் உள்ளிட்ட சிலர் இன்று காலை சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து மனு அளித்தனர். மேலும், ஆளுநரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தவெகவின் முதல்வர் மற்றும் முன்னணி தலைவர்கள் அதிமுக எம்எல்ஏக்களிடம் ரகசியமாக பேசி, குதிரை பேரம் மூலம் பெரிய தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறியும், அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவுக்கு வந்தால் மீண்டும் சீட் வழங்கப்படுவதுடன், அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகிறார்கள்.
இதன்மூலம் அதிமுக கட்சியை உடைக்க சதி செய்கிறார்கள். ஜனநாயகத்தில் இது தவறான நடவடிக்கை ஆகும். ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் தவெக ஆட்சியாளர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தற்போது அதிமுகவில் பிரிந்து இருந்த 2 அணிகளும் ஒன்று சேர்ந்துவிட்டதால், சில எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தங்களிடம் (ஆளுநர்) அளிக்கப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று வலியுறுத்தினர். இதையே மனுவாகவும் தமிழக ஆளுநர் அர்லேகரிடம் வழங்கப்பட்டதாக அதிமுக முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர். அதிமுக சார்பில் தவெக அரசு மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆளுநரிடம் பகிரங்கமாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
