தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: இரு மாநிலங்களுக்கு இடையில் பாயக்கூடிய நதிகள் அனைத்தும் தேசிய சொத்து, அதில் ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்று மிகத் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புக்கு விரோதமாக, தற்போது கர்நாடக மாநில அரசு மேகதாது அணை விவகாரத்தில் நடந்து கொள்கிறது. 4 மாநிலங்களுடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு மாநிலமும் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்னையில் புதிய கட்டுமானங்களை, புதிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
ஆனால் அதை மீறி திட்ட அறிக்கை தயாரிப்பது, பூமி பூஜை போடுவது, அணையை கட்டியே தீருவோம் என்று சவால் விடுவது போன்றவையெல்லாம் இரு மாநில மக்களிடையே நல்லுறவைக் கெடுக்கக்கூடிய செயலாகும். இத்தகைய முறையில் கர்நாடக மாநில அரசாங்கம் தொடர்ந்து செயல்படுமானால், அது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். அத்தகைய ஒரு நிலையை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது.
தமிழக அரசு தமிழ்நாட்டினுடைய உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்னையில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதில் எந்தவிதமான சமரசமும் கூடாது. தமிழ்நாட்டினுடைய மிக முக்கியமான பாசன ஆதாரம், குடிநீர் ஆதாரம் என்கிற முறையில் காவிரியைப் பாதுகாக்க, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசனையைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று அளித்த பேட்டியில், காவிரியின் உரிமை, எங்கள் வாழ்வோடு, வளத்தோடு, எங்கள் உயிரோடு கலந்துள்ளது. அதை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகமும், தமிழகமும் இரண்டும் பாதிக்காமல், ஏற்கனவே காட்டப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில், முந்தைய ஆட்சியாளர்கள் பின்பற்றிய நடவடிக்கையை தொடர்ந்து பின்பற்றி, தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்க கூடாது என்றார்.
