- சூலூர், கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உயர் நீதிமன்றம்
- சென்னை
- சுலூர், கோயம்புத்தூர் மாவட்டம்
- கார்த்திக்
- மோகன்ராஜ்
சென்னை: கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட அனைத்து வகையான ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மரபணு சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். வழக்கை நடத்துவதற்காக காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சங்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைந்து நீதிகிடைக்க செய்யுமாறு அவருக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை நீக்க அமெரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை கேட்டுள்ளோம். வீடியோக்களை நீக்க குறைந்தபட்சம் 7 நாட்கள் ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது என்றார்.
அரசு குற்றவியல் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணையை கூடுதல் எஸ்.பி. கண்காணித்து வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட முடியாது. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மனு தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
