- மேட்டூர் அணை
- குறுவை
- எடப்பாடி
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- மேட்டூர் அணை…
சென்னை: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முன்பே, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் தங்கு தடையில்லாமல் சென்றது.
2011ம் ஆண்டு காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ‘நெய்வேலி காட்டாமணக்கு’ என்ற செடி நீர் நிலைகள் முழுவதும் ஆக்கிரமித்து பாசனத்திற்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு. அதிமுக அரசு, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் முறையாக தூர் வாரும் பணியை காலத்தே மேற்கொண்டதால், ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றதால், விவசாயிகளுக்கு எவ்வித சேதமுமின்றி விளைச்சல் பெருகி, அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் கிருஷி கர்மான் விருதினை 6 முறை பெற்றோம்.
கடந்த ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரப்படவில்லை என்று சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும், நானும், எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும் பலமுறை பேசியும் எந்தப் பயனும் இல்லை. இந்தாண்டும் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் அவசர கோலத்தில் தூர் வாரப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் சென்றடையாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் மழை வெள்ள நீர் வடியாமல் விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மேலும், கொள்ளிடம் ஆறு, கோரையாறு, வெண்ணாறு போன்ற ஆறுகளில் இருந்து கிளை ஆறுகள் பிரியும் தலைப்புகளில் ஆகாயத் தாமரையை தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்புகளை அமைத்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.
எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, டெல்டா மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளிலும் தேங்கிக் கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்திட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
