×

விஜய்க்கு வாக்களிக்க சிறுவர்கள் மூலம் பெற்றோரை வலியுறுத்திய விவகாரம் விசாரணை கோரி பொதுநல வழக்கு: தவெக, திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுகவுக்கு எதிராகவும், பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு சிறுவர்களிடம் செல்வாக்கை தவெக கட்சியினர் செலுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர் ஆஜராகி, வெறும் செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவுக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் வழக்குதான் தொடர முடியும் என்றார்.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்தியதாக தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஊழல் நடவடிக்கையை பொறுத்தவரை வெற்றிபெற்ற வேட்பாளரை எதிர்மனுதாரதாக சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மனுதாரர் தவெக மீதுதான் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

அதனால் தவெக மீது விசாரணை நடத்த உத்தரவிடலாம். எங்களுக்கு எதிரான நேரடி குற்றச்சாட்டு எதுவும் இல்லை. எனவே எங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்குமாறு திமுக, தவெக, அதிமுக, தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Vijay ,Court ,DAVEK ,DMK ,AIADMK ,Election Commission ,Chennai ,Vasuki ,Bhuvanagiri, Cuddalore district ,
× RELATED வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு