சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க கால அவகாசத்தை நீட்டித்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் மடிவுகள் குறித்து ஆராய 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அந்த குழு தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அனைத்துமட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசி வருகிறது. அவர்களின் கருத்துக்களையும், அவர்களின் பரிந்துரைகளையும் பெற்று வருகிறது.
மேலும் திமுகவினர் தங்கள் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்வதற்காக ‘‘உடன் பிறப்பின் குரல்” என்ற பெயரில் இணையதளத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதிலும் அனைவரும் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இணையதளம் வாயிலாக இதுவரை 4.60 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கள ஆய்வு குழுவினரின் அறிக்கையை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து “கள ஆய்வு” செய்வதற்காக 38 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவானது, மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்துமட்ட திமுக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து கருத்துகளையும்- அவர்களின் பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ம் தேதிக்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிருத்திருந்தோம். தற்போது ஆய்வுக்குழுவினர் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியதின் அடிப்படையில் வரும் ஜூன் 10ம் தேதி கள ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
