* சேர்கள், பேனர்கள் சூறை; 4 மணி நேரத்திற்கும் மேல் பொதுமக்கள் மறியல்
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே திருமண விழாவில், பைக்கில் வந்த 12 பேர் கொண்ட முகமூடி அணிந்த வந்த மர்ம நபர்கள் புகுந்து, மேள கலைஞர் உட்பட 6 பேரை சராமாரியாக அரிவாளால் வெட்டினர். திருமண விழாவில் போடப்பட்டிருந்த சேர்கள், பேனர்களை சூறையாடி விட்டு தப்பிச் சென்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே கும்பல் மானூர் அருகே மேலும் 3 பேரை அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த இருவருக்கு திருமணம் நடந்தது. இதனையடுத்து மாலையில் வரவேற்பு நடக்க இருந்தது. இதற்காக திருமண வீட்டில் வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இந்நிலையில் திடீரென அந்த பகுதிக்கு நான்கு பைக்குகளில் 12 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து அங்கு வந்தது.
அவர்கள் அந்த தெருவில் நின்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்திற்குள் நுழைந்து சேர்கள், பேனர்களை சேதப்படுத்தினர். பின்னர் அந்த தெருவில் நின்று கொண்டிருந்த திருமணத்திற்கு வந்த மேள கலைஞர் ஒருவர் உட்பட 6 பேரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இதனால் அந்த ஊரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் நெட்டூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த அருள்மாறன், அவரது தந்தை ரமேஷ், ராயப்பன், அனந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், நெட்டூரைச் சேர்ந்த குமார், குலையநேரியைச் சேர்ந்த மேளக் கலைஞர் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு, அரிவாள் வெட்டு சம்பவத்தை கண்டித்தும், மர்ம கும்பலை உடனே கைது செய்து செய்யக் கோரியும் ஆலங்குளம் – ரெட்டியார்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த தென்காசி எஸ்பி அசோக்குமார், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து எஸ்பி, டிஎஸ்பி மற்றும் போலீசார், விஏஓ மாரியப்பன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் திருமண வீட்டில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்திய உண்மையான குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பொது மக்கள் தெரிவித்தனர். இதனால் இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. சாலை மறியல் போராட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 6 பேரை வெட்டிய கஞ்சா கும்பல் மானூர் தெற்குப்பட்டி ஊருக்குள் புகுந்து மேலும் 3 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம், மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ஆலங்குளம் நெட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காததால் கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது. இதனால் கஞ்சா கும்பல் இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

* சுட்டுப்பிடிக்க உத்தரவு
முகமூடி கொள்ளையர்களை போலீசார் பிடிக்க முயற்சிக்கும் போது அவர்கள் ஆயுதங்களால் எதிர் தாக்குதலில் ஈடுபட்டால் போலீசார் துப்பாக்கியால் அவர்களை சுட்டு பிடிக்க (கைது செய்ய) போலீஸ் உயரதிகாரி ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
* சிசிடிவி மூலம் விசாரணை
ஆலங்குளத்தில் திருமண வீட்டில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியதுடன், விழாவிற்கு வந்தவர்களையும் வெட்டிய முகமூடி கும்பல் யார் என அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 4 பைக்குகளில் தலா மூவர் வீதம் 12 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து வருகிறது. தாக்குதலை நடத்தி முடித்து விட்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்கின்றனர். இந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் அந்த முகமூடி கும்பல் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
* தனிப்படைகள் அமைப்பு
தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி முகமூடி கொள்ளையர்களை விரைவில் கைது செய்யும்படி நெல்லை சரக டிஐஜி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எஸ்பிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், முகமூடி கஞ்சா ரவுடிகளின் அட்டகாசத்தையடுத்து தென்மண்டல ஐஜி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்களுக்கு தகவல் தெரிவித்து போலீசாரின் ரோந்து பணிகள், வாகன சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் முகமூடி கொள்ளையர்களை கைது செய்ய நெல்லை மாவட்ட எஸ்பி பிரசண்ணகுமார் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் எஸ்பி அசோக்குமார் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 தனிப்படைகளும் நேற்றிரவு முதல் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
* கூலிப்படைக்கு தொடர்பா?
நெட்டூர் பகுதியில் தென்மாவட்டங்களை கலக்கும் கூலிப்படை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கூலிப்படை கும்பலின் தலைவன் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த 9 பேர் வெட்டு சம்பவத்தில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
