வடலூர்: வடலூர் அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியலில், முகம் சிதைந்த நிலையில், இளம்பெண் சடலமாக புதைந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுதோப்பு என்ற இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையோரம் அதிகளவில் மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த இடத்தில் முகம் சிதைந்த நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் கிடந்துள்ளது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நெய்வேலி போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த இளம்பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. மேலும் துர்நாற்றம் வீசியதால் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் மண்ணில் பாதியளவு புதைந்துள்ளதால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் காணாமல் போன இளம்பெண்களின் விவரங்களை சேகரித்து வரும் போலீசார், இறந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அப்பெண்ணின் இறப்புக்கான முழு காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* காவல் நிலையம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா (41). கட்டிட தொழிலாளியான இவரும், நாசரேத் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (37) என்பவரும் நண்பர்கள். கட்டிட வேலைக்கு ஒன்றாக சென்று வருவார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவில் நாசரேத் காவல் நிலையம் அருகே இருவரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாஸ்கர், அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குபதிந்து பாஸ்கரை கைது செய்தனர். நாசரேத் காவல் நிலையம் அருகிலேயே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
