ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதியில் கடந்தாண்டு புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரி, நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் பிரிவில் 60 பேர், பிபிஏ-60, பி.காம் பொது -60, பி.எஸ்சி கணினி அறிவியல்-50, பி.எஸ்சி உளவியல்-50 பேர் என மொத்தம் 280 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிக்கு மவுன்ட்-பூந்தமல்லி சாலையில், பட்ரோடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 2.18 ஏக்கர் நிலம் நிரந்தர இடமாக ஒதுக்கப்பட்டது. அங்கு கலைக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு ரூ.22.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நங்கநல்லூரியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 7ம் தேதி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. நேற்று இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், சென்னை மற்றும் புறநகர் பகுதி மாணவர்களின் நலன் கருதி, வரும் ஜூன் 1ம் தேதிவரை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பிரிவினருக்கு வரும் ஜூன் 2ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 3ம் தேதியும் தரவரிசை பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், இக்கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 5ம் தேதியும், பொது கலந்தாய்வு 8ம் தேதியும் நடைபெறுகிறது. பின்னர் வரும் 18ம் தேதி தொடர் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி வகுப்புகள் துவங்குகின்றன. புதிதாக சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஜூலை 1ம் தேதி வகுப்புகள் துவங்கும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
