×

குதிரை பேர அரசியல்லாம் நடக்கல… முட்டுக்கொடுக்கும் விசிக அமைச்சர் வன்னி அரசு

காரியாபட்டி: தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றப்பின் முதல்முறையாக தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அயன்ரெட்டியபட்டிக்கு நேற்று வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சமூக நல்லிணக்கத்தை நோக்கி விடுதலைச்சிறுத்தைகள் களமாடி வருகிறோம். எல்லா மக்களையும் இணைக்கின்ற அமைச்சராக நான் செயல்படுவதற்கு இந்த மண்ணிலிருந்து நான் உறுதி ஏற்கிறேன்.

மின்தடை தொடர்பாக பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த அரசு பொறுப்பேற்று பத்து நாட்கள் தான் ஆகிறது. பல்வேறு இடையூறுகள், இருக்கின்ற தடைகள் அனைத்தையும் தாண்டி தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார்கள். அந்த அடிப்படையில் சிறிது அவகாசம் கொடுத்து சரி செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. கட்டாயம் இது நல்ல ஆட்சியாக, மக்கள் விரும்பும் ஆட்சியாக, எந்தவித பாகுபாடும் இல்லாத ஆட்சியாக தொடரும் என்பதில் மாற்று கருத்து இல்லை’’ என்றார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைவதால் குதிரைபேர ஆட்சி நடக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனரே’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் இதுவரை நாகரீகமான அரசியலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நாகரீக அரசியலுக்கு எதிராக எதுவும் நடக்காது. அப்படி சொல்வது என்பது இந்த அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அப்படி எந்த பேரமும் இங்கு இல்லை. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறினார், இது குதிரை பேர அரசு இல்லை, குதிரை வேக அரசு என்று. கட்டாயம் அதை நோக்கித்தான் நகரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை’’ என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

Tags : VSI Minister ,Vanni Arusa ,Kariyapatti ,Vithuluthi Chiruthaigal Party ,Deputy General Secretary ,Tamil Nadu ,Social Justice Minister ,Ayanretiyapatti, ,Mallanginar, Virudhunagar district ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில...