×

மக்களை மறந்த துரோகியே எம்எல்ஏ பதவியை தூக்கி எறிய அது உன் பாட்டன் வீட்டு சொத்தா? தவெகவில் இணைந்த மரகதம் குமரவேலை கண்டித்து தொகுதி முழுவதும் சுவரொட்டிகள்

சென்னை: தவெகவில் இணைந்த மரகதம் குமரவேலை கண்டித்து தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியிள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியை சேர்ந்தவர் மரகதம் குமரவேல். இவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் எம்பி ஆனார்.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு மீண்டும் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கினார். ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் மதுராந்தகம் தனி தொகுதியில் போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பை வழங்கினார்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். இதில் வெற்றி பெற்றார். அதிமுக இரண்டாக உடைந்தபோது, வேலுமணி அணியில் மரகதம் குமரவேல் இணைந்தார். இந்நிலையில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து கடிதம் வழங்கினார்.

மேலும் தவெக கட்சியில் இணைவதாக அறிவித்தார். இதனால் கடுமையாக கோபமடைந்த மதுராந்தகம் தொகுதி அதிமுக கட்சியினரும், வாக்களித்த மக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற தேர்தலில் எல்லாம் வாய்ப்பை வழங்கிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம் செய்தவர் என்று அதிமுகவினர் கொந்தளித்தனர்.

இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி முழுவதும் மரகதம் குமரவேலை கண்டித்து, நன்றி மறந்தவரே.. பணப்பேயே, துரோகியே, துரோகம் செய்த மரகதமே ஒழிக! ஒழிக!! ஒழிக!!! வாக்காள பெருமக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்த மரகதம் குமரவேல் ஒழிக! தொண்டர்களுக்கு துரோகம் செய்த நன்றி கெட்ட மரகதமே ஒழிக! வெற்றிக்கு உழைத்த தொண்டர்களை மறந்த நன்றி கெட்ட மரகதமே – துரோகி மரகதமே ஒழிக!

துரோகி மரகதமே ….எம் எல் ஏ பதவியை தூக்கி எறிய உன் பாட்டன் வீட்டு சொத்தா மக்களை மறந்த துரோகியே.. இந்த மதுராந்தகம் தொகுதி மண்ணை மிதிக்கும் தகுதி இனி உனக்கில்லை என்று மதுராந்தகம் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள பெயர் பலகையை அகற்ற வேண்டும், அலுவலகத்திற்கு சீல் வைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Tags : MLA ,Maragatham Kumaravel ,Thavega ,Chennai ,Taiyur ,Thiruporur ,Chengalpattu district ,Chief Minister ,Jayalalithaa ,Kanchipuram ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில...