×

தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள் மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடும் வகையில் உள்துறை ஆணையில் உரிய தெளிவுரை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் வழங்கியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: சில அரசு விழாக்களில் தேசியப் பாடலைப் பாடுவது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் அரசு, கல்வி, பண்பாடு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தொடர்ந்து, வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைமுறையை மக்கள் மாளிகை பின்பற்றி வருகிறது, நாட்டுப்பண் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் இந்த வரிசைமுறை, மாநிலத்தில் நீண்டகாலமாக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக அமைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களில் மக்கள் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நாளிட்ட ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.

அத்தகைய தெளிவுரை, உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணக்கமாக மாற்றுவதுடன், நிர்வாக ரீதியிலான குழப்பங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாகவும் அமையும், இவ்விவகாரத்தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : MODI ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Ministry of Interior ,
× RELATED ஜூன் 3ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கி...