பணம் திருட இடையூறாக இருந்த தாய்,மகனுக்கு கத்திக்குத்து

கீழக்கரை, மார்ச் 4:  கீழக்கரை அடுத்துள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானக் குமார்(45). சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (43). இவர்களுக்கு காளீஸ்வரன், சகுதீஸ்வரன் ஆகிய மகன்கள் உள்ளனர். நேற்று முத்துலட்சுமி மகளிர் மன்றக் கூட்டத்துக்குச் சென்று விட்ட நிலையில், சகுதீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதையறிந்த சந்தானகுமாரின் உறவினரும், புல்லந்தை கிராம உதவியாளராக பணிபுரிபவருமான சந்திரசேகர்(32) முத்துலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த சகுதீஸ்வரனிடம் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளார். சாவியைத் தர மறுத்து சப்தமிட்ட சிறுவனை, அவர் கத்தியால் அறுத்து பக்கத்தில் இருந்த அறையில் அடைத்தார்.

வீட்டுக்கு திரும்பிய முத்துலட்சுமி, கத்தியுடன் நின்றிருந்த சந்திரசேகரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரிப்பதற்கு முன் முத்துலட்சுமியை கழுத்து பகுதியில் கத்தியால் குத்தினார். அலறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த இளைஞர்கள்  சந்திரசேகரை பிடித்து ஏர்வாடி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த தாய், மகன் இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரையில் உள்ள தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் சந்திரசேகர் நகையை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். நகையை உடனடியாக திருப்பும்படி நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சந்தானகுமார் மனைவி வெளியே சென்றதை அறிந்து வீட்டில் புகுந்து நகையை திருடுவதற்கு முயற்சித்ததாகவும், இடையூறாக இருந்த தாய்,மகனை கத்தியால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: