சேலம்: ஏற்காட்டில் 49வது கோடைவிழா மலர் கண்காட்சி இன்று காலை தொடங்கியது. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மலைகளின் அரசன் என அழைக்கப்படும் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காட்டிற்கு இக்கோடை விழா நடக்கும் நாட்களில் பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இதனால், கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சேலம் மாவட்ட நிர்வாகம் துவங்கியது.
ஏற்பாடுகள் முழுமையடைந்த நிலையில், நடப்பாண்டின் ஏற்காடு 49வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி இன்று காலை தொடங்கியது. அண்ணாபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர், அதிகாரிகளுடன் மலர் காட்சிகளை பார்வையிட்டார். காய்கறி, பழக்கண்காட்சி அரங்கையும் திறந்து வைத்தார்.
இக்கோடைவிழாவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில், அண்ணா பூங்காவில் 2 லட்சம் மலர்களை கொண்டு மலர் காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்நாளான இன்று, இந்த மலர் காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதமான சீதோஷணநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அண்ணாபூங்காவில் காளை மாடு, கன்றுக்குட்டியுடன் கறவை பசு, முயல், வாத்து, ஆடு, நாய், கோழி, சேவல் மற்றும் டெடிபேர், தேவதை, பரதநாட்டிய மங்கைகள், இரட்டை இதயம், மான் உருவம், பிறை நிலா, சிறகுகொண்ட இதயம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள், வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரம் தொட்டிகளில் வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதேபோல், தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலைக்கோயில், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றிருந்து, இயற்கை அழகை ரசித்தனர். ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இக்கோடை விழா வரும் 28ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. தினமும் பல்வேறு துறைகளில் சார்பில் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
