சென்னை: தலைநகரான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல மணி நேரம் மின்வெட்டு உருவாகியுள்ளது. இதனால், ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரச்னையை தீர்க்காத மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால், மறுநாள் வேலைக்குச் செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க, சிறு குறு தொழில்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கணினி சார்ந்த அலுவலகங்கள் மின்சாரமின்றி முடங்கியுள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசும் – மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தொலைப்பேசி மையமான மின்னகத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள் இப்படி இருக்க மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வெட்டுக்கு காரணம் பராமரிப்பு பணி தான் என சிம்பிளாக பதில் கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மின்வெட்டு காரணமாக இருள் சூழ்ந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை மற்றும் கொள்ளை கூட நிகழும் என அச்சத்தில் இருந்துவருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏவே அரசை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மக்கள் மறியலால் ஸ்தம்பித்த கொளத்தூர் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதாகுப்பம் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பாபா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் கொளத்தூரில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. கொளத்தூர் ராஜமங்கலம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட 200 அடி சாலையில் புழல் கடப்பா பகுதி மற்றும் ரேவதி நகர் பகுதியில் நேற்று இரவு எட்டு மணி முதல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படாததால் நள்ளிரவு 2 மணிக்கு அப்பகுதி மக்கள் செந்தில்நகர் போலீஸ் பூத் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜமங்கலம் போலீசார் வந்து பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் வந்து பிரச்னையை சரி செய்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என்று கூறினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைத்து அவசர அவசரமாக மின் பிரச்னை சரிசெய்யப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
‘‘தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து நிம்மதியாக தூங்க முடிவதில்லை. தினமும்குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது மின்தடை ஏற்படுகிறது. இதனால் மறியல் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது’’என்று மக்கள் தெரிவித்தனர்.
திருவொற்றியூரில் ஆபீஸ் முற்றுகை திருவொற்றியூர் விம்கோ நகர், பாரத் நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர், ரங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே பகல் வேளைகளில் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்றிரவும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் முறையான பதில் அளிக்காததால் சாலை மறியல் ஈடுபட்டனர். பவர் கட்டால் பரிதவித்த தண்டையார்பேட்டை மக்கள் ஏழுகிணறு போர்ச்சுக்கல் தெருவில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது அதை தொடர்ந்து மக்கள் மின்சாரம் வரவில்லை என்று மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர் அதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்தனர் இதே போல் ராயபுரம் காசிமேடு வண்ணாரப்பேட்டை ஆர்கே நகர் புது வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மின்சாரம் இரவு நேரங்களில் தடை ஏற்பட்டது பொதுமக்களின் எதிர்ப்புக்கு பிறகு மின்சாரம் ஒரு சில பகுதிகளில் உடனடியாக வழங்கப்பட்டது தினந்தோறும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணியில் 20 மணி நேரம் மின் தடை திருத்தணியில் ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள ராகவ நாயுடு குப்பம், பாலாபுரம், புதூர் , வாங்கனூர் அய்யனேரி, கொண்டாபுரம், அம்மனேரி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் சிறுவர்கள் முதியோர் தூக்கம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட ருக்மணிபுரம் வி.கே.என்.கண்டிகை, வி.கே.ஆர் புரம், கே.ஜி.கண்டிகை, உள்பட பல்வேறு கிராமங்களில் மின்தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை பள்ளிப்பட்டு அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு நெசவுத்தொழில் முடங்கி இரவு முழுவதும் பொதுமக்கள் தூக்கமின்றி அவதி அடைந்தனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள நெடுமரம் கிராமத்தில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் உள்ள அத்தியாவசிய சேவைகளுக்காக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சூறைக்காற்றால் திருத்தணி பகுதியில் நேற்று மாலை மின்தடை ஏற்பட்ட தொடர்ந்து திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட ருக்மணிபுரம் வி கே ஆர் புரம், நரசிங்கபுரம், வி கே என் கண்டிகை, ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் அம்மனேரி, கொண்டாபுரம், ஞானக்கொல்லி தோப்பு, திருவாலங்காடு ஒன்றியத்தில் நெடும்பரம் சுற்றுவட்டார் கிராமங்களில் 20 மணி நேரம் கடந்தும் மின் விநியோகம் தொடங்காததால் கிராம கிராம மக்களுக்கு குடிநீர் , அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிப்படைந்ததுள்ளனர்.
வாலாஜாபாத்தில் 50 கிராமங்கள் பாதிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், அய்யம்பேட்டை, ஏக்கனாம்பேட்டை, ஊத்துக்காடு, கீழ்ஒட்டிவாக்கம், திம்மராஜாபேட்டை, ஏக்கனாம்பேட்டை, பூசிவாக்கம் மற்றும் வாலாஜாபாத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் மின்வெட்டல் நூற்றுக்கணக்கான மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், வாலாஜாபாத் -தாம்பரம் முக்கிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாதம்தோறும் மின் பராமரிப்பு பணி என ஒரு நாள் முழுவதும் மின்தடை செய்யப்படும்போது எந்தவித மின் பராமரிப்பு பணிகளை செய்கின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. முறையாக மின் பராமரிப்பு பணி செய்து இருந்தால் பேரிடர் காலங்களில் அறிவிக்கப்படாத நீண்ட நேர மின்வெட்டு ஏற்படாது என்கின்றனர். இதனிடையே, சாலை மறியல் குறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல செய்தனர். சாலை மறியலால் வாலாஜாபாத்-தாம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொன்னேரியில் தினமும் 10 முறை மின் தடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் தினமும் 10 முறைக்குமேல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பெரிதும் அந்த பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் புழுக்கத்தால் தவிக்கின்றனர். இரவு நேர மின்தடையால் தூங்கமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டுக்கு திமுக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின் செயல்படாமல் பழுதாகிவிடுகின்றன. திருவள்ளூரில் சாலையில் இறங்கி போராடிய மக்கள் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி முழுவதும் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக கிராம பகுதி என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் இரவு நேரத்தில் உலா வருவதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வெளியே அனுப்ப முடியாமல் குடும்பத்தினர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், நேற்றும் திடீரென இரவு நேரத்தில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் கடம்பத்தூர் மேம்பாலம் அருகே திருவள்ளூர் – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரவுநேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகத்தில் அன்றாட வாழ்க்கை பாதிப்பு மதுராந்தகம் குறைந்த மின்னழுத்தம், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் மின்தடை நீடிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் சரிவர இயங்காத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த மின்னழுத்தம் காரணமாக மோட்டார் பம்புகள் இயங்காததால் குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மின்வெட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.
மதுரவாயலில் அலட்சியமாக பதில் கூறும் அதிகாரிகள்: சென்னை மதுரவாயலில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனி நான்கு மற்றும் ஐந்தாவது பிளாக், அபிராமி நகர், கந்தசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9:30 மணிக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் 2000க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது தொடர்பாக புகார் அளிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்த போதும் அழைப்பை ஏற்கவில்லை. மின் வெட்டால் அவதியுற்று ஆத்திரமடைந்த நிலையில் திரண்டு வந்த பொதுமக்கள் மதுரவாயல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பணியில் இருந்த அதிகாரி ஒருவரை கேட்டபோது பல்வேறு பகுதியில் பழுதாகி மின்வெட்டு ஏற்படுவதாக கூறினார். அழைப்பை ஏன் ஏறபதில்லை, சென்னை அருகே மிகப்பெரிய பகுதியில் இரண்டு ஊழியர்களை வைத்து என்ன செய்ய முடியும் என பொதுமக்களின் கேள்விக்கு அதற்கு முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்தலின் போது மட்டும் எப்படி மின்வெட்டு இல்லாமல் விநியோகம் செய்ய முடிந்தது. செல்போனில் தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்று அப்போது உடனடியாக புகாரை நிவர்த்தி செய்தீர்கள் என கடும் வாக்குவாதம் செய்தனர்.
இந்த இடங்களை தவிர்த்து கொடுங்கையூர், ராயபுரம், எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம், புழுதிவாக்கம், திருவான்மியூர், முட்டுக்காடு, பட்டாபிராம், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம்,செம்மஞ்சேரி, பம்மல், மூவரசன்பேட்டை, ராஜகீழ்பாக்கம், கடம்பத்தூர், வெண்மணம்புதூர், ஊத்துக்காடு, அவலூர் போன்ற இடங்களில் தொடர் மின்வெட்டு பிரச்சனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. புழலில் 7 மணி நேர தொடர் மின்வெட்டு சென்னை புழல் அருகே புத்தாகரம், லட்சுமிபுரம், இந்திரா நகர், சாரதி நகர், திருவள்ளூர் சாலை, பாரதியார் தெரு உள்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று 7 மணி நேரம் தொடர் மின்வெட்டு காரணமாக ஏராளமான முதியவர்கள், குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட லட்சுமிபுரம், கடப்பா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்க அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டபோதும் மின்வாரிய ஊழியர்களை போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமான புழல் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் நேற்றிரவு கடப்பா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அறிவிக்கப்படாத தொடர் 7 மணி நேர மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மறியலில் ஈடுபட்ட மக்கள், தவெக ஆட்சி அமைந்த 10 நாட்களில் பல்வேறு வகைகளில் பொதுமக்கள் சிரமப்படுவதுடன், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.
மாதவரத்தில் மின் தடையால் மக்கள் அவதி சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளான செங்குன்றம், புழல் ஒன்றியம், சோழவரம் ஒன்றியம், பாடியநல்லூர், தீர்த்தக்கரையாம்பட்டு, விளாங்காடுபாக்கம், கிராண்ட்லைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், நல்லூர், சோழவரம், புழல், காவாங்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு பகல், இரவு நேரங்களில் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசையும் விமர்சித்து வருகின்றனர். துரைப்பாக்கத்தில் தொடரும் மின்வெட்டு சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15வது மண்டலம் 193-வது வார்டுக்கு துரைப்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் தெரு,வேம்புலி அம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு,தேரடி தெரு,ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பெருங்குடி, சிவரம் பகுதிகளிலும் மின்வெட்டை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் மின்வெட்டு ஏற்பட்டது.இதனையடுத்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணி அளவில் மின்விநியோகம் செய்யப்பட்டது.நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்கமின்றி பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில்: ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து எங்கள் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல் குறைந்த மின்னழுத்தம் மற்றும் உயர் மின் அழுத்தம் அடிக்கடி ஏற்படுவதால் வீட்டு உபயோக பொருட்களான டிவி,பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விளக்குகள் மின்விசிறிகள் ஆகியவை பழுதடைகின்றன.இது குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் கூற மறுக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இதுபோன்று மின்வெட்டு ஏற்பட்டால் பொதுமக்கள் ஆகிய நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
