கெங்கவல்லி, மே 20: ஆத்தூர் கேசவன் தியேட்டர் தெருவில், காந்தி நகரைச் சேர்ந்த இளங்கோ கணேசன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இளங்கோ கணேசன், கடைக்கு பாதாம், பிஸ்தா, திராட்சை உள்ளிட்ட பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆர்டரின் பேரில் பார்சல்களை கொண்டு வந்த வேன் டிரைவர், அதை பூட்டியிருந்த கடைக்கு முன்பு இறக்கி வைத்து விட்டு சென்றுள்ளார். கடை உரிமையாளர் வந்து பார்த்த போது, வெளியில் வைக்கப்பட்டிருந்த பார்சல் பொருட்கள் மாயமாகியிருந்தது. கடை முன்பு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியை பார்த்த போது, முதியவர் ஒருவர் பார்சல் பொருட்களை திருடி செல்வது தெரிந்தது.
இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று பார்சலை திருடிய முதியவர் ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் உலாவிக்கொண்டிருந்தார். இளங்கோ கணேசன் மற்றும் உறவினர்கள் அவரை பிடித்து, ஆத்தூர் டவுன் எஸ்ஐ சிவசக்தியிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரவி(65) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் பல கடைகளின் முன்பு, இது போல பார்சல்களை தொடர்ந்து திருடி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த பொருட்களை போலீசார் மீட்டு, அவரை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
