சேலம், மே 19: சேலத்தில் ரூ.59 கோடியில் புதியதாக கட்டப்பட்ட புதிய கட்டிடத்திற்கு நீதிமன்றங்கள் மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் புதியதாக மாவட்ட முதன்மை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59 கோடி மதிப்பீட்டில் புதியதாக 16 நீதிமன்றங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நீதிமன்றம் முன்பகுதியில் உள்ள புதிய கட்டிடத்திற்கு தீண்டாமை வன்கொடுமை, போக்சோ, விஜிலென்ஸ் நீதிமன்றம், விபத்து வழக்குகளை விசாரிக்க கூடிய மாவட்ட நீதிமன்றம் 1, விபத்து வழக்குகளை விசாரிக்க கூடிய சார்பு நீதிமன்றங்கள் 1, 2 ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், மாவட்ட வணிகவியல் நீதிமன்றம், வணிகவியல் சார்பு நீதிமன்றம் 1 ஆகிய நீதிமன்றங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் பின்பகுதியில் உள்ள புதிய கட்டிடத்திற்கு கூடுதல் மகளிர் நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றம் 3, 4 ஆகிய நீதிமன்றங்கள் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாற்றப்பட்ட நீதிமன்றங்களில் தான் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பணியாற்றி வரும் நீதிபதி சொர்ணம் நடராஜன் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
