×

பெரும்பான்மை இல்லாததால் கட்சியினரை அழைத்து அமைச்சர் பதவி கொடுப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: தவெக மீது பிரேமலதா தாக்கு

 

விருத்தாசலம்: பெரும்பான்மை இல்லாததால் எல்லோரையும் அழைத்து அமைச்சர் பதவி கொடுப்பது குதிரைப்பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தாக்கியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், தொகுதி எம்எல்ஏவான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் தேமுதிக வரவேற்கும் என கூறியிருக்கிறேன். மாற்றம் என்பது ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும்.

மெஜாரிட்டி இல்லாததால் எல்லோரையும் அழைத்து அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள். இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கக்கூடாது, இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மெஜாரிட்டியாக வெற்றிப்பெற்று, அப்போது கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் வரவேற்கலாம். மெஜாரிட்டி இல்லாத போது ஆதரவு கொடுப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது நிச்சயம், ஒரு தவறான முன்னுதாரணமாக மக்கள் பார்க்கிறார்கள்.

முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளவர் என்னவெல்லாம் சொல்லி பதவிக்கு வந்திருக்கிறார். அதிமுகவை ஊழல் சக்தி எனக்கூறினார், இன்று அவர்களின் ஆதரவோடு தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தவெகவை தூய சக்தி என்று கூறிய முதல்வர், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், பதவி ஏற்று ஒரு வாரம்தான் ஆகிறது. கொஞ்சம் அவகாசம் வேண்டும் என அவரும் கூறி இருக்கிறார். தமிழ்நாடு ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். குதிரை பேரத்திற்கோ, லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டு ஒரு நேர்மையான நல்லாட்சி அமைய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

* நிலத்தடி நீர் மாசு காரணமாக நிறைய பேருக்கு சிறுநீரகம் பாதிப்பு

‘விருத்தாசலம் தொகுதியில் வெற்றிப்பெற்ற பிறகு அரசு மருத்துவமனையில் பல தரப்பட்ட நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். அதிகப்படியானோருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர், இதற்கு நிலத்தடி நீர் மாசு காரணமா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

மருத்துவர்களிடம் கேட்டபோது, சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதால் பாதிப்பு என தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மருத்துவர், மருந்து, செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் இல்லாததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதனை முதல்வர், அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று சரி செய்வேன்’’ என்று பிரேமலதா தெரிவித்தார்.

Tags : Premalatha ,Thaweka ,Virudhachalam ,Premalatha Vijayakanth ,DMDK ,General Secretary ,MLA ,Virudhachalam Government Hospital ,Cuddalore district ,
× RELATED கேரள சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை...