- காங்கிரஸ் கட்சி
- திருவஞ்சூர் ராதகிருஷ்ணன்
- கேரளா
- பினராயி விஜயன்
- திருவனந்தபுரம்
- சட்டசபை
- இடைக்கால சபாநாயகர்
- கிராம்.
- சுதரன்
- சபாநாயகர்
- முன்னாள் அமைச்சர்
- காங்கிரஸ் கூட்டணி
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் ஜி. சுதாகரன் முன்னிலையில் 139 எம்எல்ஏக்களும் பதவியேற்றனர். இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும், இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.சி. மொய்தீனும், பாஜ சார்பில் கோபகுமாரும் போட்டியிட்டனர்.
கேரள சட்டசபை வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு இம்முறை தான் பாஜ முதன்முதலாக போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முதல்வர் வி.டி. சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பாஜ மாநில தலைவரும், நேமம் தொகுதி எம்எல்ஏவுமான ராஜீவ் சந்திரசேகர் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் ஓட்டு போட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவருக்கு 101 ஓட்டுகளும், ஏ.சி. மொய்தீனுக்கு 35 ஓட்டுகளும், கோபகுமாருக்கு 3 ஓட்டுகளும் கிடைத்தன.
புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனை முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கடந்த 1991 முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2004 மற்றும் 2011 காலகட்டத்தில் உம்மன்சாண்டி மந்திரிசபையில் இவர் அமைச்சராக இருந்தார்.வரும் 29ம் தேதி கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் சட்டசபையில் உரையாற்றுகிறார்.இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயனை இடதுசாரி கூட்டணி அறிவித்தது. இதற்கு நேற்று சபாநாயகர் அனுமதி அளித்தார்.
* பினராயி விஜயனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்
கேரளத்தில் கடந்த 10 வருடங்கள் முதல்வராக இருந்த பினராயி விஜயனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இவர் முதல்வர் பதவியில் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
