வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், இந்திய வம்சாவளியான தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (61), கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் உடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலின் போது, கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாப் (61), தனது முதல் மனைவியின் குழந்தைகளுக்கான பாதுகாவலருடன் தொடர்பில் இருந்தது தொடர்பான தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசாரத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், தம்பதியினரிடையே கடும் மனக்கசப்பையும் உண்டாக்கியது. இது குறித்து உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கையில், ‘கமலா ஹாரிஸ் மீண்டும் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை வெல்லத் தீவிரமாக உள்ளார். இதற்காகத் தனது கணவர் டக் எம்ஹாப்பின் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார். ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலின் போது ஏற்பட்ட அழுத்தம் மற்றும் டக் எம்ஹாப்பின் பழைய விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்தது போன்ற சம்பவங்கள் இவர்களது திருமண வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன’ என்று தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, கமலா ஹாரிஸ் தனது புதிய தேர்தல் வியூகங்களை வகுக்க கலிபோர்னியாவின் மாலிபு பகுதியில் 8.15 மில்லியன் டாலர் (ரூ. 79 கோடி) மதிப்பிலான தனி வீட்டை வாங்கியுள்ளார். அரசியல் வாழ்க்கையிலிருந்து கமலா ஹாரிஸ் விலகி, பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று அவரது கணவர் விரும்புவதாகவும், மீண்டும் தேர்தலில் நின்றால் அது இவர்களது திருமண உறவை முறித்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டு கமலா ஹாரிஸ் வெளியிட்ட ‘107 டேஸ்’ என்ற தனது சுயசரிதையிலும், கடந்த தேர்தலின் போது தங்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை டக் எம்ஹாப் தனது செல்போனை கவனிக்காததால் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், தேர்தல் நெருக்கடியால் பெரிதாக வெடித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எப்படியிருப்பினும், கணவரின் எதிர்ப்பையும் மீறி வரும் 2028ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் கமலா ஹாரிஸ் உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
