சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்த எம்.பி தனபால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், காலை ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக சுமார் 80 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். அதிமுக கழகத்தில் இருக்கும் அடிமட்ட தொண்டர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.
செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றவர்கள் எல்லாம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் பங்கேற்கவில்லை என்று காலை சில ஊடகங்கள் செய்திகளை கூறின. கட்சி தலைமைக்கு எதிராகவும், தங்களுக்கு சாதகமாகவும் சில செய்திகளை வெளியிடுவதன் மூலம் எதிர் அணியினர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
25 எம்எல்ஏ-க்கள் மட்டும் தான் தனித்து செயல்படுகிறார்களே தவிர, கழக நிர்வாகிகள் அனைவரும் எங்கள் பக்கம் தான் நிற்கிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அது அத்தனையும் பொய். இன்று கூட்டத்திற்கு வந்த அதனை மாவட்ட செயலாளர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டத்தை நடத்தி பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி தலைமை கழகத்தில் சமர்பித்திருக்கிறார்கள் என்றார்.
