அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கையூட்டு வசூல் – விவசாயிகள் முற்றுகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர் . மூட்டை ஒன்றிற்கு ரூ.50 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முறையான வரிசையில் மூட்டைகளை அனுப்பாமல் சிலரிடம் லஞ்சம் பெற்று குறுக்கு வழியில் அனுப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் பலர் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அறுவடை முடிந்து 20 நாட்கள் ஆகியும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிதுள்ளனர். நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருங்குளத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஈரப்பதம் காரணமாக நெல் மணிகள் மூட்டையிலே முளைக்க தொடங்கியுள்ளதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே பெருங்குளத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: