ஆலய வழிபாடுகளில் தெய்வீக இசை

இசையே தெய்வமாக…
“இசையால் வசமாக இதயம் எது
இறைவனே இசை வடிவம் எனும் பொழுது”
– என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை பண்கள், வடக்கத்திய ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று இசையைப் பிரித்து பிரித்துச் சொன்னாலும், இசை ஒன்றுதான்.

இசை என்பதற்கு என்ன பொருள்?
இசை என்பதற்கு ஏற்றுக் கொள்ளல் என்று பொருள். இசைதல்( தலையா ட்டுதல்) என்று பொருள். அதனால்தான் பாடும் பொழுது நாம் தலையாட்டுகின்றோம். இசையைக் கேட்டு தலையாட்டுகின்றோம். நாம் மட்டும் தலையை ஆட்டவில்லை. எல்லா உயிர்களும் பயிர்களும் தலையை ஆட் டுவதாக நிரூபித்து இருக்கிறார்கள். நம் பிரார்த்தனைக்கு பகவான் இசைகிறான். அவனை இசைய வைக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் பண் ணில் தேவாரத்தையும் திவ்ய பிரபந்தத்தையும் பாடினார்கள். இசை வழி பாடு நடத்தினார்கள். வாழ்வில் இசைதான் பிரதானம். மக்கள் இசையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பதை கோயில் வழிபாட்டிலும் ஏனைய திருவிழா சமயங்களிலும் இசைக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அறியலாம்.

மூன்று இசைகளில் மொத்த வாழ்க்கை
மனிதனின் மொத்த வாழ்க்கையும் மூன்று இசைகளில் அடங்கி விடுகின்றது. இதனை பட்டினத்தார்,
முதற் சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போதென ஊதும் அம்மட்டோ
இம்மட்டோ நாம் வாழ்ந்த பூமி நலம்
என்றார்.
குழந்தை பிறந்தவுடன் இசைக்கும் பழக்கம் உண்டு. அடுத்து இசை வடிவமான சங்கில் குழந்தைக்கு பாலூட்டுகின்றார்கள். அதற்காக தாய் மாமன் சங்கை பரிசளிக்க வேண்டும் என்கிற மரபு உண்டு. சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகும் என்று தங்கத்தால் சங்கு செய்தேன் என்ற பாடல் இதன் சிறப்பை உணர்ந்து. திருமணத்தின் போது இரண்டாவது சங்கு, குறிப்பாக நகரத்தார் சமூகங்களில் திருமண மங்கல நாண் பூட்டும் பொழுது சங்கை ஒலிக்கின்றார்கள்.
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று ஆண்டாள் பாடியிருப்பதால் வைணவத்தில் திருமணத்தில் போது சங்கு இசைக்கும் பழக்கம் உண்டு.

ஆண்டாள் விரும்பிய சங்கு
ஆண்டாள் தனது திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்று ஒரு பதிகம் பாடி இருக்கிறார்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
இந்தப் பதிகத்தை தினம் மாலை வேளையில் விளக்கேற்றி பாட விரை வாக திருமணம் நடக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு. அதிலே திருமண இசை மரபைச் சொல்லுகின்றாள் .பகவானுடைய ஆயுதங்கள் அதிகம். பெயர்களும் அதிகம். அதில் பிரதானமான சங்கு, சக்கரம், வாள், கதை, வில் என ஆயுதங்கள் ஐந்து. பஞ்சாயுதங்கள் என்று சொல்லுவார்கள். இதில் முதலில் சொல்வது சங்கம்தான். பகவான் சங்கத்தை பாஞ்சசந்யம் என்பார்கள்.
ஆண்டாள் நாச்சியார் கண்ணனின் சங்கின் மீது காதல் கொள்கின்றாள். அந்தச் சங்கினைத் தொட வேண்டும் என்று நினைக்கின்றாள். காரணம் அந்த சங்கு தானே இறைவன் இதழோடு இணைந்து அவருடைய வாய் அமுதத்தை பருகும் பாக்கியத்தைப் பெற்றது.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
கண்ணனின் இதழோடு பொருந்தி அவனுடைய வயமுதம் பருகும் வாய்ப்பு சக்கரத்துக்கு இல்லை. ஆனால் சங்குக்கு அந்த அருமை உண்டு.

வெற்றி தரும் சங்க நாதம்
அது சரி, வாழ்வுக்கு சாதகமாகும் சங்கின் ஒலி, ஒருவரை அழிப்பதற்குக் காரணமாக இருக்குமா என்றால் “சங்கு ஊதி விட்டான்” என்று சொல்லே ஒன்றின் முடிவைக் காட்டுகின்றது. “கடைச்சங்கம் ஆம்போதென ஊதும்”. மனிதனின் வாழ்வில் நிறைவில் ஊதப்படும் சங்கு கடைச்சங்கு. இத்தனை காலம் வாழ்ந்த மனிதன் இதோ விடைபெற்றுச் சென்று கொண்டிருக் கிறான் என்பதை உலகுக்கு அறிவிக்கும் சங்கு கடைச்சங்கம். ஆம் போதென ஊதும் என்பது வாழ்வின் நிலையாமையைச் சொல்லுகின்றது.அதற்குள் நிலைத்த வாழ்க்கையைத் தேட வேண்டும். அதற்கு இறைவனை வணங்க வேண்டும் என்பதைச் சொல்லுகின்றது. மகாபாரத போர்க்களத்தில் இரண்டு படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போரின் தொடக்கமாக சங்கு ஊதப்படுகின்றது. பீஷ்மர் ,துரியோத னன், என பலரும் சங்க நாதம் செய்கின்றனர். கண்ணன் தன்னுடைய பாஞ்சசந்யத்தை எடுத்து ஊத, அதன் பயங்கரமான இருத யத்தை பிளக்கச் செய்யும் ஒலியால் இதயம் சுக்கு நூறாகி, அப்பொழுதே துரியோத னாதியர்கள் பட்டுவிட்டார்கள். இனி தங்களால் பிழைக்க முடியாது என்கிற அளவுக்கு இதயம் ஒடுங்கிப் போகின்றார்கள் என்று வியாசர் எழுதுகின்றார். அந்த ஸ்லோகம் இது.
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்|
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந் ||1-19||
பாண்டவர்களுடைய வெற்றியை அறிவிக்கும் அதே சங்கின் ஒலி துரியோதனாதியர்களின் தோல்வியையும் அறிவிக்கின்றது.

கோயில்களில் காலை முதல் இரவுவரை இசைதான்
சைவ வைணவ ஆலயங்கள் எதுவாக இருந்தாலும் பிரதானமாக இசை இசைக்கப்படுகின்றது. பூஜை வேளைகளிலே இசை இல்லாமல் எந்தப் பூஜைகளும் நடப்பதில்லை. இசையைக் கேட்பதற்கு பகவான் பிரியப்படுகின்றான். காலையில் தொடங்கியது முதல் இடையில் நடைபெறும் பூஜைகள் முதற்கொண்டு நிறைவாக நடைபெறும் அர்த்த ஜாம பூஜை வரைக்கும் இசை மரபு என்பது ஆலயங்களில் உண்டு.
அதற்காக ஓதுவா மூர்த்திகளையும் இசைவாணர்களையும் கோயில்களில் நியமித்து இருக்கின்றார்கள். அதோடு பல்வேறு இசைக் கருவிகளும் கோயில்களில் இருக்கின்றன. தெய்வங்கள் அனைத்தும் இசை வடிவங்களாகவே, இசை பாடும் படிவங்களாகவே அல்லது இசை கருவி ஏந்திய வடிவங்களாகவே நாம் காணலாம். புராண ,இதிகாச தல வரலாறுகள் இசையோடு தொடர்புடையதாகவே தெய்வங்களைச் சித்தரிக்கின்றன. தெய்வங்கள் ஒன்று இசைக்கு இசையும். அல்லது இசையை இசைக்கும். இசைக்கு “புகழ்” என்ற பொருள் இருப்பதால் பகவானின் புகழை நாம் இசையோடு பாடுவது தானே முறையாக இருக்கும்.

புல்லாங்குழல் இசை
கண்ணன் புல்லாங்குழல் இசைக்கின்றான். வேணுகானம் என்பார்கள். அந்தக் குழல் இசையால் தான் இந்த உலகம் பரிணமித்துக்கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது என்பார்கள். குழலிசையின் பெருமை யைப் பற்றிய ஒரு பதிகம் பாடி இருக்கிறார் பெரியாழ்வார். அதில் ஒரு பாசுரம்.
புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்
பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்தணையான் குழலூத
அமர லோகத்தளவும் சென்று இசைப்ப
அவி உணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர் பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவி உணா இன் சுவை கொண்டு மகிழ்ந்து
கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே –
குழலிசையைச் கேட்டு தேவர்கள் அவி உணவை மறந்தார்களாம். அது மட்டுமில்லை; இசை கேட்டு நன்றாக இருக்கிறதே என்று அரங்கம் தேடி நுழைவதைப் போல, அவர்கள் பூலோகத்தில் ஆயர்பாடி, தேடி வந்தார்களாம்.

இசைக்கருவி, தேவதைகள்
இசைக்கருவி இல்லாத தேவதைகள் இல்லை. பரமசிவனார் கையில் உள்ள இசைக்கருவி உடுக்கை. இன்றும் எளிய கிராம மக்கள் வாசிக்கும் கருவி சுருதி மாதா, தாளம் பிதா என்பார்கள். பரமசிவன் மாதா பிதாவாக அதாவது அம்மையப்பன் ஆக இருப்பதால், சுதியும் தாளமும் அவரிடத்தில் பொருந்தி இருக்கின்றன. அப்படி பொருந்தினால் தானே இசை கேட்பதற்கு ரம்யமாக இருக்கும். பார்வதி தேவியின் குரலும் அத்தனை இனிமையாக இருக்குமாம். யாழை பழிக்கும் மொழியாள் என்று அன்னைக்கு பெயர். கலைவாணியின் கையில் இருப்பது வீணை. நரம்புக் கருவி. வர்ண மெட்டுக்கள் அதில் வகைவகையாகத் தோன்றும். வீணை வாசிக்கும் போது மட்டும் மெட்டு என்று சொல்லைச் சொல்வார்கள். ஒவ்வொரு தேவதை வீணைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

வேணுகானமும் வீணா கானமும்
வேணுகானமும் வீணா கானமும் உலகின் பல்வேறு வடிவங்களாகவும் உணர்வுகளாகவும் படைப்புகளாகவும் பறந்தும் விரிந்தும் இருக்கின்றன. அது பல்வேறு தோற்றங்களைத் தருகின்றது. ராகங்களை வர்ணங்கள் என்றே சொல்வார்கள் .ஸ்வரங்களின் பல்வேறு வடிவங்கள்தான் ராகங் கள். ராகங்களுக்கு வண்ணம் உண்டு. பாடல்களிலும் வண்ண பாட்டு என்று ஒரு வகை உண்டு. எண்ணம், உணர்ச்சி உண்டு. குழலையும் யாழையும் போற்றியவர்கள் நாம். வள்ளுவர்,“குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்ழலைச் சொல் கேளாதவர்” என்பார். மழையைச் சொல்லிலே இரண்டு இசைக்கருவிகளின் இன்ப உணர்வுகள் கலந்து இருக்கின்றன என்பார். இதற்கு குழல் என்றால் அந்த இசை ஆண் குழந்தையைக் குறிப்பதாகவும், யாழ் என்பது பெண் குழந்தையின் குரலை குறிப்பதாகவும் ஒப்பிட்டு நயம் சொல்வார்கள்.

சங்க கால இசை
சங்க இலக்கியத்தில் இசை பாடல் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மக்களின் வாழ்வு இசையோடு கலந்து அமைந்திருந்தது என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. இசை பற்றிய செய்திகள் தொல்காப்பியர் காலத்திலிருந்து இலக்கியங்களில் உண்டு.இசைபாடும் பாணரைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. பாணர், இசைப் பாணர், யாழ்ப்பாணர் என பல பிரிவுகளாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
சங்க கால மக்கள் இசையில் வல்லவர்களாக இருந்ததோடு பலவிதமான இசைக் கருவிகளை திறம்பட கையாண்டனர். சங்க இலக்கிய நூலான பரிபாடல் பல வகையான இசைச் செய்திகளை தன்னிடத்தே கொண்டுள்ளது. வையை நதி பற்றிய பாடல் அற்புதமானது.வையை பெருக்கெடுத்து ஓடும் அழகையும் இரண்டு கரைகளையும் இடித்துக் கொண்டு ஓடுதலால், நதியில் சப்தம் எழுவதையும்,அதோடு நீராடுவோரின் இசை முழக்கத்தையும் சேர்த்து நீராடுதலை இன்பமாகியது என்று கூறுகிறது.

தேவாரத்தில் இசை
தேவார காலத்தை தமிழரின் இசைப் பொற்காலமாகச் சொல்லலாம். சைவம் இசையோடு வளர்ந்தது. இக்காலத்திலும் தேவாரப் பாடல்கள் ஓதுவார் மூர்த்திகளால் பிரகாசம் அடைந்துள்ளன. சைவ ஆலய வழிபாடுகளில் தேவாரங்கள் இசைக்கப்படுகின்றன. “இசை பாடவிம்மி அழுமாறு வல்லார்”, “இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்”, “ஒலிகொள் இன்னிசை செந்தமிழ்” “பண்ணின் இன்மொழி வல்லார் பாடல்” என்றெல்லாம் வரும் வரிகள் ஆன்மிக இசையின் முக்கியத்தை உணர்த்துகின்றன.தேவார காலத்தில் வீணையும் யாழும் தனித்தனி இசைக்கருவிகளாகவே கருதப்பட்டு வந்தன. மாசில் வீணையும், பண்ணார்ந்த வீணை என்று வீணையைப்பற்றி தேவாரம் போற்றுகிறது.அதே நேரத்தில் பாலையாழோடு செவ்வழிப் பண் என்று யாழைப் பற்றியும் கூறுகிறது.

தேவாரப் பண்கள்
தேவாரப் பண்கள் மொத்தம் 23. அதேபோல, “திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற வாக்கியப் படி இனிய பாக்களைக் கொண்டுள்ளது திருவாசகம். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பாடல்கள் மூலம் அந்தக் காலத்தில் தமிழர்களின் இசை மேன்மையை அறிய முடியும் .அவர் அருளிய திருப்பள்ளி எழுச்சி பாடல்களும் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல்களும் இன்னிசைப் பாடல்கள்.. தேவாரப் பாடல்கள் பண்ணிசையாலான மரபுப் பாடல்கள். ஆனால் திருவாசகப்பாடல்கள் திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருஉந்தியார் போன்ற பல வகை நாட்டுப்புற இசை பாடல்கள். மாணிக்கவாசகர் பண்ணிசையில் நிபுணர் என்பதனை அவர் பாடிய திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், போன்றவைகளால் விளங்கிக் கொள்ளலாம். “இறைவனைப் பாடினால்தான் அவன் மகிழ்வான்” என்பதை மணிவாசகர்,” “சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்றும், “ஆரா அமு தின் அருள் தாளிணைப்பாடிப் பேரார் வேற்கண் மடவீர் பொன்னூசல் ஆடாமோ” என்றும் பாடுகின்றார்.

Related Stories: