சுப கிரகங்கள் எப்பொழுதும் நெருக்கடி அற்ற சுபமான நிகழ்வுகளையும், சிந்தனைகளையும் தரும் என்பதில் மாற்றமில்லை. அவ்வாறே, சுபகிரகங்கள் வரிசை போன்று நிற்கப்பெறும் யோகம் நற்பலன்களைத் தரும் என்பதில் மாற்றமில்லை. ‘மாலா’ என்ற சொல்லானது, பல பொருளைத் தருகின்றது. அதில், இந்த யோகத்திற்கு தொடர்புடைய பொருள் என்னவென்றால், மாலை என்று பொருள். சில கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் நின்றால் உருவாகும் யோகம் மாலா யோகமாகும். மாலை வடிவில் கிரகங்கள் அமையப்பெறும் பொழுது கிரகங்கள் தாங்கள் அமர்ந்த பாவங்களையும் அதே தருணத்தில் ‘திருஷ்டி’ என்ற பார்வையால் ஏற்படுகின்ற பலன்களும் சுபமாக இருக்கும் என்பதே சிறப்பானதாகும்.
சுப கிரகங்களே ஒன்றுக்கொன்று நட்பாக இருக்க வேண்டும் என்பதே ஜோதிடத்தின் பொதுவான விதி. அவ்வாறே, ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜாதகம் மிகுந்த நற்பலன்களையும் நல்ல பண்புகளையும் ஜாதகர் பெற்றவராக இருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. யோகங்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், பல சிந்தனைகளாக இருந்தாலும் மாற்றங்கள் சிறப்பானதாக இருக்கும்.
ஜோதிட விதிகளின் அடிப்படையில் மாலா யோகம் என்றால் என்ன?
லக்னத்திற்கும் – சந்திரனுக்கும் கேந்திரங்களில் அதாவது, 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களில் சுபகிரகங்களான புதன், சுக்ரன், வியாழன், வளர்பிறை (சந்திரன்) நின்றிருந்தால், அதனை மாலா யோகம் என்றழைக்கப்படுகிறது. இந்த சுப கிரகங்கள் அசுப கிரகங்களின் பார்வையின்றி இருந்தால், இன்னும் சிறப்பு. ஆனால், அசுப கிரகங்களின் தொடர்பு எப்படியாவது ஏற்பட்டுவிடும்.
சுபமாலா யோகத்தின் உட்சூட்சுமங்கள் என்ன?
*சனி, ராகு – கேது (சாயா கிரகங்கள்) பார்வைகள், தொடர்புகள் ஏற்படாது இருப்பின் ‘மாலா’ சிறப்பு பெறும். இந்த கிரகங்கள் கேந்திரங்களில் அமரும் பொழுது நன்மை – தீமை எதுவானாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
*இதில், வியாழன் என்ற தேவ குருவும், சுக்ரன் என்ற அசுர குருவும், ஒரே பாவகத்தில் நிற்கக்கூடாது. ஒன்றை ஒன்று பார்வை செய்து கொள்ளக் கூடாது.
*சுபகிரகங்கள் நீசம் பெறக்கூடாது. நீச பங்கம் ஏற்பட்டால்கூட பரவாயில்லை.
*சந்திரன் அதீத சுப தன்மையுடனோ, அசுப தன்மையுடனோ இருக்கக்கூடாது. சந்திரனுக்கு முன்னோ பின்னோ கிரகங்கள் இருப்பது சிறப்பு.
*இந்த மாலா யோகமே இரண்டு, மூன்று உட்பிரிவுகளாக உள்ளன. அவை சுபமாலா யோகம், அசுப மாலா யோகம் என்பதாகும்.
*இதில், கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தால் நற்பலன்களைத் தரும்.
சுபமாலா யோகத்தின் சிறப்பான பலன்கள்
*அழகானத் தோற்றம் உடையவராகவும் மிடுக்கான ஆடை உடுத்து பவராகவும் இருப்பார்.
*வீடு, வாகனம் போன்றவைகள் கிடைக்கப் பெற்றவராகவும். சுகஸ்தானத்தை அதாவது, ஆரோக்கியத்தை மேன்மைபடுத்தும் குணம் கொண்டவராகவும் இருப்பார்.
*பொருளாதாரத்தை மேன்மைபடுத்தும் செயல்கள் இவர்களிடம் அதிகம் மிகுந்திருக்கும்.
*நல்ல குணம், நல்ல நடத்தை கொண்டவராகவும் இருப்பார். சமூகத்தில் கௌரவம், மதிப்பு உள்ளவராகவும் இருப்பார்.
*நல்ல நண்பர்கள் வட்டத்தைப் பெற்றவராக இருப்பார். எதையும் முன்கூட்டியே திட்டமிடும் சிந்தனை வளம் கொண்டவராக இருப்பார்.
*மேன்மையான கல்வி கற்றவராகவும் கற்ற கல்வியின் மூலம் முன்னேற்றத்தை பெறுபவராகவும் இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
*சுப கிரகங்கள் வலிமை பெற்றால் நீரிழிவு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, கவனமாக நடைப்பயிற்சி போன்றவைகள் செய்தல் அவசியம்.
சுபமாலா யோகம் மேன்மை பெற என்ன செய்யலாம்?
*படிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்தல். தங்களால் இயன்ற உதவிகள் செய்தால் இந்த யோகம் மேன்மை பெறும்.
*தனித்த சரஸ்வதி அல்லது லட்சுமி நாராயணரை வழிபடுதல் நலம் பயக்கும்.
*நீங்கள் படித்த ஆசிரியர் அல்லது குருவிற்கு வஸ்திரங்கள் கொடுத்து அவர்களிடம் ஆசி பெறுவது இன்னும் சிறப்பைத் தரும்.
*பாழடைந்த பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
*இனிப்பான பொருட்கள் அல்லது கற்கண்டு, திராட்சை கொண்டு ஹயக்ரீவருக்கு அர்ச்சனை செய்து அதனை குழந்தைகளுக்கு கொடுங்கள். நன்மைகள் உண்டாகும்.
*நூலகங்களுக்கு செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் வாங்கித் தரலாம். மேல்நிலை படிப்புகளுக்காக செல்லும் குழந்தைகளுக்கு வழிகாட்டுவதுகூட நல்ல நற்பயன்களைத் தரவல்லது.
*ஏழ்மையான குழந்தைகளுக்கு உடை வாங்கித் தருவதும் நற்பயன்களை அளிக்கும்.
