ஆதித்தபுரம் எனும் ஊரில் விச்வாவசு எனும் வியாபாரி இருந்தார். காசு பணத்திற்குக் குறைவே இல்லை. அந்த வியாபாரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகளைச் சீரும் சிறப்புமாக வளர்த்த வியாபாரி, அவர்களுக்குத் தகுந்த வயது வந்ததும், அவர்களைத் தனியே வியாபாரம் செய்யச் சொல்லத் தீர்மானித்தார். நால்வருக்கும் பெரும் பொருளைத்தந்து, ‘‘குந்தித் தின்றால் குன்றும் குறையும். ஆகையால் நீங்கள் நால்வரும் இனி தனியாக வியாபாரம் செய்யுங்கள்! நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்! வாக்கு தவறாதீர்கள்!’’ என்றெல்லாம் அறிவுரை சொல்லி வாழ்த்தினார். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதை மனதில் ஏற்று, பிள்ளைகள் நால்வரும் நல்லவிதமாகவே செயல்பட்டார்கள்.
நன்கு பராமரிக்கப்படும் சோலை செழிப்பாக வளர்வதைப் போல, அந்தப் பிள்ளை களின் செல்வமும் நாள் தோறும் செழித்துப் பெருகியது. அவர்களின் உழைப்பையும் நேர்மையையும் ஊரார் அனைவரும் பாராட்டினார்கள். அவர்கள் இருந்த ஆதித்தபுரத்தில் ஒரு சிவன் கோயில் இருந்தது. பழுதடைந்து போயிருந்த அக்கோயிலைப் புதுப்பிக்க வேண்டுமென்று நினைத்தார், ஆலயத்தின் குருக்கள். ஊரார், அவரவர்கள் இயன்றதைக் கொடுத்தார்கள். அதிகமாகப் பொருள் கொடுக்க இயலாதவர்கள், திருப்பணியில் பணியாளராக வேலை செய்தார்கள்.
ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலர், ‘‘குருக்களே! அந்த வியாபாரியின் பிள்ளைகள் நான்கு பேரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள். நீங்கள்போய் அவர்களிடம் கேட்டால், தாராளமாக நிதி உதவி செய்வார்கள்’’ என்று ஆலோசனை சொன்னார்கள். குருக்கள் என்ன செய்யப்போகிறார் என்பதை, அப்புறம் பார்க்கலாம். வியாபாரியின் பிள்ளைகள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்.
தகப்பனாருடன் சேர்ந்திருந்த போது என்றால், அவருடைய ஆலோசனைக்கு, உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தனியாக, தலையெடுத்த பின் அதுவும் செல்வச் செழிப்போடு இருக்கும்போது, நல்லவைகள் எல்லாம் சொல்லாமல்கொள்ளாமல், அமைதியாக வெளியேறி விடாதா? அந்த நிலையில்தான் இருந்தார்கள் வியாபாரியின் மகன்கள்.
ஊர்ப் பெரியவர்கள் சொன்ன வார்த்தைக்கு இணங்க, குருக்கள் போய் வியாபாரியின் மகன்கள் நால்வரையும் பார்த்து, விவரம் சொல்லி நிதி உதவி கேட்டார். நால்வரும் மறுக்கவில்லை; ‘‘தாராளமாகத் தருகிறோம்; கண்டிப்பாகத் தருகிறோம்; நாளை வாருங்கள்!’’ எனப்பதில் கூறினார்கள். குருக்களும் மகிழ்ச்சியோடு திரும்பினார். சொன்னபடி மறுநாள் குருக்கள் போய், நால்வரையும் பார்த்தார். அவர்களோ, ‘‘ஏனய்யா! நாளைக்கு வாருங்கள் என்றால், மறுநாளே வந்து நிற்பீர்களா? போய், ஒரு வாரம் கழித்து வாருங்கள்! பார்க்கலாம்’’ என்று பேசி விரட்டி விட்டார்கள்.
பொது வாழ்வுக்கு வந்தால், பொறுமை மிகவும் அவசியம். இதை உணர்ந்த குருக்கள், அமைதியாகத் திரும்பி, அடுத்த வாரம் போனார். இந்த முறையும் அவமானமே மிஞ்சியது, ‘‘ஏய்யா! என்னவோ கடன் கொடுத்தாற்போல், காசு கேட்க வந்து விட்டீர்களே! அடுத்த மாதம் வாருங்கள்! பார்க்கலாம்’’ என்று வசைமாரி பொழிந்து விரட்டினார்கள். பொறுமை இழக்காத குருக்கள், அடுத்த மாதமும் போனார். இந்தமுறை, வாசலிலேயே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் குருக்கள். அது மட்டுமல்ல! வாயிற்காவலர்களும் தங்கள் பங்கிற்கு, ‘‘வசூலுன்னா சளைக்காம வந்துடுவீங்களே!’’ என்று ஏசி விரட்டி விட்டார்கள். குருக்கள் மனம் உடைந்தார்.
‘‘செல்வந்தர்களின் நிலை இதுதான் போலிருக்கிறது’’ என்றபடி மனம் நொந்து திரும்பினார். அதன் பிறகு உதவிகேட்டுப் போகவில்லை. அதன்பின் சில நாட்கள் கழித்து வியாபாரிகள் நால்வரும், கப்பலில் ஏராளமான சரக்குகளை ஏற்றிக்கொண்டு, கடல் வாணிபம் செய்யப் புறப்பட்டார்கள். பல நாட்கள் சென்றும் கரை தெரியவில்லை. அது போதாதென்று, இரவு நேரத்தில் கடும்மழை பொழிந்து, கப்பல் கவிழ்ந்து அனைத்தும் முழுகிப் போயின.
விபரீத விளைவு உண்டானது. இக்கதையை நிடதநாடு, காம்போஜநாடு, அங்கநாடு, கொங்கணநாடு எனும் நான்கு நாட்டு மன்னர்களுக்குத் துர்வாசர் சொல்லி, ‘‘வாக்கு தவறாதீர்கள். ஏதேனும் செய்கிறேன் என்று சொன்னால், செய்துவிடுங்கள்! வாக்கு தவறக்கூடாது. நினைவில் வையுங்கள்!’’ என்று உபதேசம் செய்தார். செய்கிறேன் என்று சொல்லி, செய்யாமல் விட்டால் பலரிடமும் கெட்டபெயர் உண்டாகும்; வாக்கு தவறக்கூடா தென்பதை விளக்கத் துர்வாசர் சொன்ன கதை இது.
V.R.சுந்தரி
