? குங்குமம் அணியும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன?
– பாக்கியநாதன், சேலம்.
குங்குமம் இடும்போது லட்சுமி கடாட்சம் மற்றும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் நிலைத்திருக்கச் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
‘‘ஊர்த்வபுண்ட்ர லலாடேது பர்த்துராயுஷ்ய வர்தகம்
லலாடே குங்குமம் சைவ ஸதா லக்ஷ்மீ நிவாஸகம் ”
இதன் பொருள்: நெற்றியின் மையத்தில் (ஆக்ஞா சக்கரம்) குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை அதிகரிப்பதுடன், மகாலட்சுமியை எப்போதும் நம் இல்லத்தில் நிலைத்திருக்கச் செய்யும்.
பொதுவாக காலை குளித்த பிறகு, சுத்தமான மனதுடன், கிழக்கு நோக்கி அமர்ந்து அல்லது நின்று குங்குமம் இட வேண்டும். வலது கை மோதிர விரலால் குங்குமம் இடுவது சிறந்தது. ‘‘ஓம் சக்தியை நமஹ” அல்லது ‘‘ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை நமஹ” போன்ற மந்திரங்களைச் சொல்லியும் குங்குமம் அணியலாம்.
? நல்ல நாள், திருமண நாள், பிறந்த நாள் போன்ற தினங்களில் நாம் கட்டாயமாக என்ன செய்ய வேண்டும்?
– ராஜசேகரன், கோவை.
கோவிலுக்குச் செல்லுங்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதத்தை கட்டாயமாகப் பெறுங்கள். இப்பொழுது பலர் பெரியவர் களுடைய ஆசிர்வாதத்தைப் பெறுவதை மறந்துவிட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுவதைச் சொல்லிக் கொடுங்கள்.
? சந்திரநாடி என்றொரு நூல் உண்டா?
– ராமசாமி, விளாத்திகுளம்.
உண்டு. ஜோதிட நூல். பிரச்னம் மூலம் ஜோதிடம் பார்க்கும் வகைகளில் ஒருவகை சந்திர நாடி.சந்திரன் தினந்தோறும் நகர்ந்து கொண்டிருக்கும் கிரகம். ஜென்ம ஜாதகத்தில் இது எந்த இடத்தில் இருக்கிறது யாரைத் தொடர்புகொண்டிருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை அனுமானிப்பது சந்திரநாடி ஒரு நிகழ்ச்சி உடனடியாக நடக்குமா நடக்காதா என்பதை இதை வைத்துச் சொல்லி விடலாம்.
? விரதங்களில் உயர்ந்த விரதம் எது?
– உஷா, மந்தவெளி.
மௌன விரதம் தான். அது ஆத்ம பலத்தைத் தரும். ஒன்று கிடக்க ஒன்று பேசுவதால் தான் இன்றைக்குப் பிரச்னைகள் வருகின்றன. பேச்சைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல பிரச்னை களைக் குறைத்துவிடலாம். ஆற்றலை அதிகரிக்கலாம். அதனால் தான் அருணகிரிநாதர் ‘‘சும்மா இரு; சொல்லற” என்று உபதேசித்தார்.
? பூஜை அறையில் பாடுவதற்கு ஸ்லோகங்கள் வரவில்லை; பாடல்கள் தெரியவில்லை, என்ன செய்து பிரார்த்தனை செய்யலாம்?
– அனந்தநாராயணன், திருநாகேஸ்வரம்.
நாம சங்கீர்த்தனம் செய்யலாம் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா, சிவா, முருகா என்று சொல்வதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? மிக எளிதாகச் சொல்லலாமே. பூஜை அறையில் மட்டும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். இதை திருமங்கை ஆழ்வார் மிக அழகாகச் சொல்லுகின்றார் கஷ்டம் வந்தால் நாமத்தைச் சொல்லுங்கள். கஷ்டம் வராவிட்டாலும் நாமத்தைச் சொல்லுங்கள் அது நாக்குக்கு இனிமையைத் தரும் என்கிறார்.
துஞ்சும் போது அழைமின் ; துயர்வரில் நினைமின்;
துயர் இலீர் சொல்லிலும் நன்றாம் ;
நஞ்சுதான் கண்டீர், நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!
? விசாக நட்சத்திரத்தின் சிறப்பு என்ன?
– கார்த்திகேயன், குடவாசல்.
முருகனுடைய திருநட்சத்திரம் விசாகம்.முருகனை சுவாமிநாதன் என்று சொன்னார்கள். குருசுவாமி என்று முருகனுக்குப் பெயர். காரணம் விசாகம் குருவுக்குரிய நட்சத்திரம். வைணவர்களின் குல குரு (பிரன்ன ஜன கூடஸ்தர்) நம்மாழ்வாரின் ஜன்ம நட்சத்திரம் விசாகம்தான். ‘‘உண்டோ விசாகத்திற்கு ஒப்பொரு நாள்?” என்று விசாக நட்சத்திரத்தின் சிறப்பைப் பாடுகின்றார், மணவாள மாமுனிகள்.
?‘‘அருணகிரிநாதருக்கு முத்து என்று ஏன் முருகன் அடி எடுத்துக் கொடுத்தார்?
– ராஜலட்சுமி, கரூர்.
திருப்புகழை முத்து முத்தாகப் பாடவேண்டும் என்பதற்காக முத்து என்று அடியெடுத்துக் கொடுத்தார் முருகப்பெருமான் என்று எடுத்துக் கொள்ளலாம். அடுத்து ‘மு’ என்கிற உயிர்மெய்யில் ‘ம்’ என்கிற மகர ஒற்றும் (மெய்யெழுத்து) உ என்கிற உகர உயிரும் இணைந்திருக்கிறது. மகாரம்(ம) என்பது ஜீவாத்மாவையும் உகாரம் என்பது குருவையும் காட்டும். குருவாக முருகப் பெருமான் வந்து அவருக்கு அடியெடுத்துக் கொடுத்தார். அருணகிரிநாதர் குருவாய் வருவாய் அருள்வாய் முருகா என்று பாடுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
? எல்லா அவதாரங்களுக்கும் கோயில்கள் உண்டா?
– சிவசங்கரன், திருமுல்லைவாயில்.
உண்டு. மச்சா அவதாரத்திற்கு நாகலாபுரம் என்ற ஊரில் கோயில் உண்டு. கூர்ம அவதாரத்திற்கும் கோயில் உண்டு. கூரம் என்ற ஊரே உண்டு. ஆனால், அதிகமான கோயில்கள் நரசிம்ம அவதாரத்திற்கும், ராம அவதாரத்திற்கும், கிருஷ்ணாவதாரத்திற்கும், திருவிக்ரம அவதாரத்திற்கும்தான் இருக்கின்றன.
? மரணத்தை தடுக்க என்ன வழி?
– கணேஷ்குமார், திருக்கோவிலூர்.
மரணத்தை தடுக்க ஒரே வழி இனி பிறக்காமல் இருப்பதுதான். அதனால்தான் எல்லோரும் பிறவாமையை வேண்டி னார்கள். ‘‘ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே” என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம். நாயன்மார்களும் இதைத்தான் வேண்டுகிறார்கள். பிறவாமை வேண்டும் அப்படி பிறந்து விட்டால் உன்னை மறவாமை வேண்டும் சென்று பாடு கிறார்கள். இறைவனை, ‘‘பிறவி என்னும் நோய்க்கு மருந்து” என்றும் ‘‘பிறவாநிலை அளிக்கும் பெம்மான் என்றும் பாடுகின்றார்கள்.
? விடையாற்றி உற்சவம் என்றால் என்ன?
– ஜெகதீஷ்சர்மா, காட்டுமன்னார்கோவில்.
ஒரு உற்சவத்தின் நிறைவை காட்டும் மங்கல உற்சவம் பெரிய திருவிழாக்கள் (பிரம்மோற்சவம்) முடிந்த பிறகு, சுவாமிக்கு ஏற்படும் களைப்பு நீங்க, கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் சிறப்பு உற்சவம் ஆகும். இது ‘விடாயாற்றி’ (களைப்பு ஆற்றுதல்) என்பதன் மருவு ஆகும். அன்று சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் சேவை மற்றும் பூப்பல்லக்கு போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
? தேவர்கள் அசுரர்கள் என்ன வேறுபாடு?
– காமாட்சி, நாகப்பட்டினம்.
இவைகளை தனிப்பட்ட மனிதர்களாகப் பார்க்காமல் மனிதர்களுடைய குண அடையாளங்களாகப் பார்ப்பது சிறந்தது. இதை இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக தேவர்கள் அசுரர்கள் என்பதைவிட சுரர், அசுரர் என்ற வார்த்தைகளே சிறப்பானது. சுரர்கள் எல்லாம் நல்லவர்கள், நல்ல குணம் உடையவர்கள் என்று பொருள். அப்படி இல்லாதவர்கள் அசுரர்கள். நல்ல குணம் என்பது தனக்கும் மற்றவர்களுக்குமானது. அதாவது, தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்பவர்கள். கெட்ட குணம் (அசுரர் ) என்பது தனக்கும் மற்றவர்களுக்கும் கேடு செய்து கொள்பவர்கள். நீங்கள் இதை புராணங்களில் பார்க்கலாம். அசுரன் தவம் செய்து பல வரங்களை வாங்குகின்றான்.. அந்த வரங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்குத் தீங்கு செய்து விரைவாக தானும் அழிகின்றான். இப்படிப் பட்ட குணங்களுக்கு தான் அசுர குணம் என்று பெயர்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பாருங்கள். இந்த குணங்கள் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு கலவைகளில் இருக்கும். ஒரு குறிப்பிட்ட குணம் செயலாக வெளிப்படும்போது தெரியும். சில செயல்களை செய்யும் மனிதர்களை கடவுள் மாதிரி வந்து உதவினான். அவன் எனக்கு தெய்வம் என்று சொல்வதையும் கேட்டி ருக்கலாம். இன்னும் சில மனிதர்கள் சில காரியங்களைச் செய்யும் போது ‘‘அவன் என்ன மனுஷனா அரக்கன்”என்றுசொல்வதையும் கேட்டிருக்கலாம்.
எனவே சுர அசுரர்கள் ஏதோ ஒரு உலகத்தில் இருக்கக்கூடியவர்கள் என்று நினைக்க வேண்டாம். நம்மிடையே உள்ள குணங்களின் வெளிப்பாடுதான் அசுர குணங்களாகவும் தேவகுணங்களாகவும் மாறுகின்றன. அசுர குணங்களைப் போக்கி தேவ குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
?ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமா?
– நடராஜன், உத்தமர்கோவில்.
ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்து கொள்வது ஒரு முறை. ஜாதகம் பார்க்காமல் மனப்பொருத்தம் மட்டும் வைத்து திருமணம் செய்துகொள்வது ஒரு முறை. இரண்டையும் நமது சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன. உலகத்தில் உள்ள பல கோடி மக்களில் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து கொள்பவர்கள் குறைவு. உதாரணமாக 800 கோடி ஜனத்தொகை என்றால் 80 கோடியே 10% ஆகிவிடும். ஆனால்,80 கோடி பேரும் ஜாதகம் பார்ப்பது போல் தெரியவில்லை.
ஜாதகப் பொருத்தத்தை விட மனப்பொருத்தம் அவசியம். அடுத்ததாக இன்னொரு விஷயமும் உண்டு.ஒவ்வொருவர் ஜாதகத்திலும் இப்படிப்பட்ட மனைவி அல்லது கணவன் தான் அமையும் என்பது தெளிவாகத் தெரியும். எனவே, பொருத்தம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அப்படித்தான் அமையும். மூன்றாவதாக ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழும் பலரை நாம் காண்கிறோம். எங்கள் இருவருக்கும் நல்ல ராசி என்று சில தம்பதியர் கூறுவதைப் பார்க்கிறோம். ராசி என்பது சந்திரன். சந்திரன் மனத்தைக் குறிப்பவர். எனவே, இரண்டு மனங்களும் ஒத்துவந்தால் அது திருமணம். மனப் பொருத்தம் வந்து ஜாதகப் பொருத்தம் வராவிட்டாலும் திருமணம் செய்யலாம். ஆனால், ஜாதகப் பொருத்தம் வந்து மனப் பொருத்தம் வராமல் திருமணம் செய்து வைத்தால் அது விபரீதமாக முடியும்.
இதற்கு ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லுகின்றேன். ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான். ஆற்றலும் அறிவும் அடக்கமும் நிறைந்த மகான். காஞ்சிபுரத்துக்கு பக்கத்திலே ஒரு சின்ன பிரதேசத்துக்கு அரசனாக இருந்தவர். செல்வந்தர். அவர் ஒருமுறை இரவு நகர்வலம் வருகின்ற பொழுது, ஒரு வீட்டில் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கிறது. என்ன விஷயம் என்று விசாரித்த பொழுது, அவர்களுடைய ஒரே பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்த ஒருவர் இந்தப் பெண்ணை யார் மணந்துகொண்டாலும் இறந்து விடுவான், என்று சொல்லிவிட்டதால், அவளுக்கு திருமணம் செய்ய முடியாமல் தவித்து அழுவதை அறிகிறார். அந்தப் பெண்ணை கொன்று விட்டு தாங்களும் மாண்டு விடுவதுதான் முடிவு என்று அழுவதைப்பார்க்கிறார்.
கூரத்தாழ்வான் சொல்லுகின்றார்.‘‘இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.”அவர்கள் தயங்குகிறார்கள். ஜோதிடர் சொன்னபடி திருமணம் செய்து கொண்டு அரசனை இழப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆனாலும் அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். குணவதியான அந்தப் பெண்ணுக்கு கூரத்து ஆண்டாள் என்று பெயர். அற்புதமாக குடும்பம் நடத்துகின்றார்கள்.
நூறாண்டுகள் கடந்தும் அவர்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு இரண்டு அற்புதமான ஆண் குழந்தைகளும் பிறக்கின்றன. ஒருவர் பராசர பட்டர். ஒருவர் வேத வியாச பட்டர். இறைவனிடம் பாரத்தைப் போடுங்கள். மற்ற விஷயங்கள் உங்களுக்கு அமைவது போலவே, நல்ல வரனும் அமையும்.
? உபதேச ரத்தினமாலை என்பது தமிழ் நூலா?
– செல்வவிநாயகம், காஞ்சிபுரம்.
இப்படிப்பட்ட சந்தேகம் தமிழ்ப்புலவர்களுக்கே சமயத்தில் வந்துவிடுகிறது.தமிழிலே திருத்தொண்டர் தொகை, பெரிய புராணம், என்று சைவ அடியார்களுடைய வரலாறுகளைச் சொல்லுகின்ற நூல்கள் இருக்கிறது அல்லவா, அதைப்போலவே வைணவத்தில் ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் வாழ்ந்த வைபவத்தை சுருக்கமாகச் சொல்லுகின்ற அற்புதமான நூல் உபதேச ரத்தினமாலை. இதை மணவாள மாமுனிகள் என்ற ஆச்சாரியார் அருளிச் செய்திருக்கிறார். இதில் உள்ள சில பாசுரங்களை வைணவர்கள் தினசரி பூஜை நிறைவு செய்யும் பொழுது பாடுவார்கள். அழகான வெண்பாக் களால் பாடப்பட்ட அற்புதமான தமிழ் நூல் இது.
தேஜஸ்வி
