சென்னை: தன்னை தமிழக முதலமைச்சராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது என்பது வதந்தி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக – அதிமுக கூட்டணி பேசுவதாக கிசுகிசுக்களாக வெளியான தகவல்கள் அடிப்படையிலேயே நான் முன்பு கருத்து கூறினேன். என்னை முதல்வராக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் என இரு தரப்பிலும் என்னிடம் வந்து நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கிறோம், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள் என யாரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்டார்.
தற்போது வரை திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம், தமிழ்நாட்டில் நிலவிய தேர்தல் முடிவு நெருக்கடியை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிட கூடாது, மறுபடியும் ஒரு தேர்தல் வந்து விட கூடாது என்பதால் மட்டுமே தவெகவு-க்கு ஆதரவு, அதுவும் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை அளித்து உள்ளதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார். 2 இடங்களை வைத்து கொண்டு நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை என்றும் கூறினார். ஒருவேளை வருங்காலத்தில் அதிமுக கட்சியானது, தவெக-வுக்கு ஆதரவு அளித்தால், எங்களுடைய ஆதரவைத் தொடர்வது குறித்து நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவெடுப்போம் என்றும் திருமாவளவன் கூறி இருக்கிறார்.
