கோவை: தவெக ஆட்சி ரீல் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும் என செந்தில் பாலாஜி எம்எல்ஏ கூறினார். கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும் மாஜி அமைச்சருமான செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சி அமைந்து ஒரு வாரம் ஆகிறது. அதிமுக கட்சி 2 ஆக பிரிந்து உள்ளது. ஒரு பிரிவினர் ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு கூறியிருந்தார். அதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்ற உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதிமுக ஆட்சி காலங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. புதிய அரசு வந்தவுடன் தான் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது போன்று செய்திகள் வெளியாகி வருகிறது. ரீல் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும்.
திமுக ஆட்சியின் முயற்சியால் தான் தமிழ்நாடு பலவேறு துறைகளில் இந்தியாவிலே முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை வளர்ச்சி பெற்ற மாநிலமாக திமுக மாற்றியுள்ளது. இதை தவெகவின் தக்க வைத்தாலே போதுமானது. தமிழ்நாட்டை பின்னோக்கி எடுத்து செல்லாமல் இருந்தாலே போதும். தவெக ஆட்சி விரைவில் கவிழுமா என்பதை பொறுத்திருந்து பார்போம். இவ்வாறு அவர் கூறினார்.
