தவெக அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகள் – கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு.!! டிடிவி தினகரன்

சென்னை: தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான அறிக்கை ஒன்றில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் தவெக அரசு தோல்வியடைய கூடாது என்று கூறி இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக தமிழகத்தில் அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன என்று கூறி இருக்கிறார்.

முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தவெக குற்றம்சாட்டிய நிலையில், அந்த கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு தமிழகத்தில் ஒருநாள் கூட விடாமல் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சாடி உள்ளார். அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சரையும் வலியுறுத்துவதாக அறிக்கையில் டிடிவி தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: