சென்னை: தமிழக ஆளுநரை முதல்வரின் தனி செயலாளர் நேற்று சந்தித்ததை தொடர்ந்து, பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு பிறகு முதல்வர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விஜய், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்களை சேர்க்க ஆளுநர் மறுத்து விட்டதால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக கட்சி தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருடன், 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கடந்த 13ம் தேதி சட்டப்பேரவையில் விஜய் தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபித்தார். தவெக தனக்கு தேவையான அளவு பெரும்பான்மையில்லாமல், மைனாரிட்டியாக இருப்பதால் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற கட்சிகளுடன் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்தார்.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியினரை குதிரை பேரம் மூலம் உடைத்து, தங்களுக்கு அமைச்சரவையில் 6 இடம் வழங்கப்படும் என்று உறுதி அளித்து, 25 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய் பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதுதான் விஜய் தெரிவித்த தூய ஆட்சியா என்று சமூகவலைதளங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்றபோது நியமிக்கப்பட்ட 9 அமைச்சர்களுக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் முதல்வர் விஜய் என்னென்ன இலாகா தன்வசம் வைத்துள்ளார் என்பது குறித்து ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லை. 9 அமைச்சர்களுக்கும் கோட்டையில் தனி அறை மற்றும் கார் உள்ளிட்ட அமைச்சருக்கு வழங்கப்படும் எல்லா சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த இலாகா என தெரியாததால் அமைச்சர்களும் தலைமை செயலகத்துக்கும், சொந்த ஊருக்கும் அரசு காரில் பயணம் செய்து சுற்றி வந்தனர்.
அவர்களது பணி என்ன என்று கூட தெரியாமல் வந்து செல்லும் நிலை இருந்தது. அதேநேரம், முதல்வர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மட்டுமே, தினசரி அனைத்து துறை செயலாளர்கள், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கு துறையே ஒதுக்கப்படாவிட்டாலும், அவரே சில துறைகளை வைத்துக்கொண்டு தனித்து செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநர் அர்லேகர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கேரளாவில் இருந்து சென்னை வந்தார்.
முதல்வர் விஜய்யின் தனி செயலாளர் செந்தில்குமார் நேற்று மதியம் கிண்டி கவர்னர் மாளிகை சென்று தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது, முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு தொடர்பாக ஒரு பட்டியலை வழங்கினார். அதேபோன்று, அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் தற்போது சேர்க்க ஆளுநர் சம்மதம் தெரிவிக்காததால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய் கோரிக்கையை ஏற்று, ஆளுநர் அர்லேகர் தமிழக அமைச்சர்களின் இலாகா பட்டியலை நேற்று வெளியிட்டார்.
அதில், தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசில் முதல்வர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
* முதல்வர் விஜய்: பொதுத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், பெண்கள் நலன், இளைஞர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள்
* என்.ஆனந்த்: ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை
* ஆதவ் அர்ஜுனா: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, விளையாட்டு மேம்பாட்டு துறை
* கே.ஜி.அருண்ராஜ்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குடும்பநலத்துறை.
* செங்கோட்டையன்: நிதித்துறை
* வெங்கடரமணன்: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை.
* நிர்மல்குமார்: மின்சாரம், சட்டம், சிறைத்துறை, நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு, சட்டமன்றம், தேர்தல் ஆகிய துறைகள்
* டி.கே.பிரபு: கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை
* ராஜ்மோகன்: பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறைகள்.
* கீர்த்தனா: தொழில் துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை.
* ஆதவ், ஆனந்துக்கு முன்னுரிமை
உள்துறை, நகராட்சி, பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை முதல்வர் விஜய் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அதற்கு அடுத்து, ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் மூலம் தான் அதிகளவு கான்டிராக்ட் தனியாருக்கு வழங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுகூட, இந்த துறை தன்வசம் வைத்துக் கொண்டார்.
லாட்டரி தொழிலில் கொடிகட்டி பறந்த ஆதவ் அர்ஜுனாவிடம் இந்த துறை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து வந்ததும் அவரும், அவரது மாமியாரும் தான் என்று கூறப்படுகிறது. அதற்கு பரிசாக தான் முக்கிய துறைகளை வழங்கி இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அடுத்து, புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இரு துறைகளிலும் பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் ஒதுக்கப்படும். நிர்மல்குமாருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால் அவரும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். செங்கோட்டையனுக்கு நிதித்துறை மட்டுமே வழங்கப்பட்டு, டம்மி ஆக்கப்பட்டுள்ளார். ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு தான் வளம் கொழிக்கும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
