கொடைக்கானல் பேரிஜம் வனப் பகுதிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை!

 

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். அதன்படி தற்போது கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கொடைக்கானலில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் பேரிஜம் வனப்பகுதியும் முக்கியமானதாக திகழ்கிறது. இங்குள்ள ஏரி இயற்கை எழில்மிகுந்த சூழ்நிலையில் உள்ளதால் இப்பகுதியை காண சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அதேவேளை, பேரிஜம் வனப்பகுதியில் நேற்று புலிகள் நடமாட்டம் காணப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட புலிகள் பேரிஜம் வனப்பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரிந்தன. இந்நிலையில், பேரிஜம் வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

 

Related Stories: