பஞ்சாபை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்; திலக்கின் பேட்டிங்கும், ஷர்துலின் பந்துவீச்சும் தான் திருப்புமுனை: கேப்டன் பும்ரா பேட்டி

தர்மசாலா: ஐபிஎல் தொடரில் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 58வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் பும்ரா பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 57, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 38, ஆர்யா 22 ரன் அடித்தனர். மும்பை பவுலிங்கில் ஷர்துல் தாகூர் 4, தீபக் சாகர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 201 ரன் இலக்கை துரத்திய மும்பை அணியில் ரியான் ரிகெல்டன் 48 (23 பந்து), ரோகித்சர்மா 25, நமன் திர் 9, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 20 ரன்னில் வெளியேற நாட்அவுட்டாக திலக்வர்மா 33 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 75, வில் ஜாக் 10 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன் விளாசினர். 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக்வர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். 12வது போட்டியில் மும்பைக்கு இது 4வது வெற்றியாகும். மேலும் நடப்பு சீசனில் ஏற்கனவே அடைந்த தோல்விக்கு பஞ்சாப்பை மும்பை பழிதீர்த்துக்கொண்டது. பஞ்சாப் 5வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் பும்ரா கூறியதாவது: இது ஒரு அருமையான போட்டி. இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. பஞ்சாப் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்ற பிறகு, நாங்கள் நன்றாக மீண்டு வந்தோம். இப்போது டெத் ஓவர்களில் பந்துவீசுவது மிகவும் கடினமாகிவிட்டது. டாஸின் போது என்ன செய்ய விரும்பினோம் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தோம். பவுலர்களுக்கு பாராட்டுக்கள். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, பதற்றப்படாமல் இருந்தனர். திலக்கின் பேட்டிங், ஷர்துலின் பந்துவீச்சும் தான் திருப்புமுனை. அனைவரும் பங்களித்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் ஒரு டெஸ்ட், டி20 போட்டிக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன், இப்போது மீதமிருப்பது ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே. ஆனால், நகைச்சுவை ஒருபுறம் இருக்க, எனது இந்த நேரத்தை நான் மிகவும் ரசித்தேன், என்றார்.

தோல்வியை ஜீரணிப்பது கடினமான விஷயம்!
பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது: தோல்வியை ஜீரணிப்பது கடினமான விஷயம். இது ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. திலக் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவருக்குப் பாராட்டுக்கள். ஒரு கட்டத்தில், நாங்கள் 170-180 ரன்தான் எடுப்போம் என நினைத்தபோது, ஓமர்சாய் ஆட்டத்தின் போக்கை எங்களுக்குச் சாதகமாக மாற்றினார். 200 ரன்களை எட்டியது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடு. அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதில் ஆட ஆவலுடன் காத்திருக்கிறேன், என்றார்.

ஆட்டத்தை முடித்து வைத்ததில் மகிழ்ச்சி;
ஆட்டநாயகன் திலக்வர்மா கூறியதாவது: ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். உலகக் கோப்பைகளிலும், சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவது உதவுகிறது. அதில் அனுபவமும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. இப்படி ஒரு பிட்சை எதிர்பார்க்கவில்லை. எனது பேட்டிங் நிலையைத் தக்கவைத்துக்கொண்டு, என் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தேன். 2வது டைம்-அவுட்டின் போது, ​​இன்னும் ஒரே ஒரு பெரிய ஓவர், நாம் ஆட்டத்தை முடித்துவிடுவோம், என்னை நம்புங்கள்’ என்று பயிற்சியாளரிடம் சொன்னேன். அந்த ஒரு பெரிய ஓவருக்காகக் காத்திருந்தேன். ஆட்டத்தை முடித்து வைத்ததில் மகிழ்ச்சி’’ என்றார்.

Related Stories: