சின்சினாட்டி: மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர் மயாமி அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி அதிரடியாய் 2 கோல்கள் அடித்ததால், சின்சினாட்டி அணி மோசமான தோல்வியை தழுவியது. மேஜர் லீக் கால்பந்து போட்டிகளில் (எம்எல்எஸ்) அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கால்பந்து அணிகள் மோதி வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், சின்சினாட்டி அணியும் மோதின. துவக்கம் முதல் தனது அணி வீரர்களை உத்வேகப்படுத்தி துடிப்புடன் ஆடிக்கொண்டிருந்த மெஸ்ஸி, 24வது நிமிடத்தில் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று முதல் கோல் போட்டார். அதற்கு பதிலடியாக 41வது நிமிடத்தில் சின்சினாட்டி அணி வீரர் கெவின் டெங்கி, பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார். சிறிது நேரத்தில் அந்த அணியின் பேவல் பூசா மேலும் ஒரு கோல் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினார்.
அந்த சமயத்தில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி, 55வது நிமிடத்தில் 2வது கோலடித்து போட்டியை சமன்படுத்தினார். அதைத் தொடர்ந்து சின்சினாட்டியின் எவாண்டர், 64வது நிமிடத்தில் கோலடிக்க, போட்டி உச்சகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்தது. அதன் பின் சுதாரித்து ஆடிய இன்டர் மயாமி அணியின் மேட்டியோ சில்வெட்டி 79வது நிமிடத்திலும், ஜெர்மேன் பெர்டெராமே 84வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு, அணியை முன்னிலைப்படுத்தினர். பரபரப்பான கடைசி கட்டத்தில் சின்சினாட்டி அணி வீரர் ரோமன் செலன்டானோ தவறுதலாக அடித்த ஓன் கோல், மயாமிக்கு சாதகமாக அமைந்தது. அதையடுத்து, 5-3 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி அபார வெற்றி பெற்றது.
