×

பிளேஆப் சுற்றுகளில் நுழையப்போவது யார்? இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்

புதுடெல்லி: ஐபிஎல் லீக் தொடரில் நேற்று முன்தினம் வரை 56 போட்டிகள் முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் அணிகள் தகுதி பெறுவது அநேகமாக உறுதியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் ஆடவுள்ள 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி, 12 போட்டிகளில் ஆடி 16 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள இரு போட்டிகளில், சென்னை, கொல்கத்தா அணிகளுடன் குஜராத் அணி மோதவுள்ளது. குஜராத் அணி, இன்னும் ஒரு போட்டியில் வென்றாலும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம். 14 புள்ளிகள், 1.103 ரன் ரேட்டுடன் 2ம் இடத்தில் உள்ள பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற சிறப்பான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மீதமுள்ள 3 போட்டிளில் 2ல் வென்றால் நிச்சயம் பிளே ஆப்புக்குள் நுழையலாம்.

மற்றொரு முக்கிய அணியாக கருதப்படும் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கடைசியாக மோதிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளது. அந்த அணி, 12 போட்டிகளில் 7ல் வென்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடம் வகிக்கிறது. மீதமுள்ள இரு போட்டிகளில் சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளுடன் மோத வேண்டி உள்ளது. 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆப் நிச்சயம். ஒரு போட்டியில் மட்டும் வென்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பிளே ஆப் சுற்றுக்கு, சன்ரைசர்ஸ் தகுதி பெறலாம்.

புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் பஞ்சாப் உள்ளது. சமீப கால போட்டிகளில் மோசமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால், தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளது பஞ்சாப். மீதமுள்ள 3 போட்டிகளில் பஞ்சாப் அணி, மும்பை, பெங்களூரு, லக்னோ அணிகளுடன் மோதவுள்ளது. இவற்றில் 2ல் வென்றால், பிளேஆப்பில் பஞ்சாப் நுழையலாம். பட்டியலில் 5ம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 11 போட்டிகளில் 6ல் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

கடைசியாக ஆடிய 8 போட்டிகளில் 6ல் வென்று, புத்துணர்வுடன் சென்னை திகழ்கிறது. நாளை நடக்கும் போட்டியில் லக்னோ அணியுடனும், அதன் பின், சன்ரைசர்ஸ், குஜராத் அணிகளுடனும் சென்னை மோதவுள்ளது. இவை அனைத்திலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. பட்டியலில் 8ம் இடத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன.

அப்போட்டிகள் அனைத்திலும் வென்றால், 17 புள்ளிகளுடன் பிளேஆப்பில் நுழையும் சாத்தியம் உள்ளது. பட்டியலில் 6ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் டெல்லி, லக்னோ, மும்பை அணிகளுடன் மோத வேண்டும். இவை மூன்றிலும் வென்றால் பிளே ஆப்பில் கனவை தொடரலாம். பட்டியலில் 7ம் இடத்தில் உள்ள டெல்லி அணி, 12 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. பட்டியலில் மேலே உள்ள அணிகள் தோற்று சரியும் பட்சத்தில், மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வென்றால், பிளே ஆப் வசப்படலாம்.

Tags : IPL ,New Delhi ,Royal Challengers Bangalore ,Gujarat Titans ,Chennai Super Kings ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 193...