×

8வது வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறிய குஜராத்; பந்துவீச்சு தாக்குதலில் ஹோல்டர் கூடுதல் பலம் சேர்க்கிறார்: கேப்டன் சுப்மன் கில் பாராட்டு

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 56வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சாய்சுதர்சன் 44 பந்தில் 5 பவுண்டரி, 2சிக்சருடன் 61, வாஷிங்டன் சுந்தர் 33 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன் அடித்தனர். நிஷாந்த் சிந்து 22 ரன் எடுத்தார்.  பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் டக்அவுட்ஆக அபிஷேக் சர்மா 6, இஷான் கிஷன் 11, ரவிச்சந்திரன் ஸ்மரன் 9, கிளாசென் 14, சுனில் அரோரா 16, நிதிஷ்குமார் 2 ரன்னில் வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 19 ரன் அடித்தார். 14.5 ஓவரில் 86 ரன்னுக்கு ஐதராபாத் சுருண்டது. இதனால் 82 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் ரபாடா, ஹேசன் ஹோல்டர் தலா 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார். 12வது போட்டியில் 8வது வெற்றி பெற்ற குஜராத் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை நெருங்கியது. ஐதராபாத் 5வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது: முதலில் பேட் செய்தது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. நாங்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினோம். நன்றாகப் பந்துவீசினால், ஆட்டத்தில் எங்களால் எப்போதும் இருக்க முடியும் என்பது தெரியும். 160-170 ரன்னை நெருங்கினால், எங்கள் பந்துவீச்சுத் தாக்குதலால் எதிரணிக்கு எளிதாக இருக்காது என்று பேசிக்கொண்டோம். சாய் மற்றும் வாஷி பேட்டிங் செய்து எங்களை 170 ரன்களுக்கு அருகில் கொண்டு சென்ற விதமும், பின்னர் பவர்பிளேயில் நாங்கள் பந்துவீசிய விதமும் அருமை. எங்கள் இரு பந்து வீச்சாளர்களுக்கும் (சிராஜ், ரபாடா) பாராட்டுக்கள். பந்துவீச்சுத் தாக்குதலில் ஹோல்டரின் வருகை கூடுதல் பலம் சேர்க்கிறது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும், தொடர்ச்சியாக 4 ஓவர் வீசுகிறார். இந்தக் காலநிலையில் இது எளிதல்ல, ஆனாலும் அவர் எங்களுக்காகஅருமையான வேலையைச் செய்து வருகிறார் என்றார்.

டி20ல் இவ்வாறு நடப்பது சகஜம்தான்!
ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: குஜராத் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாகப் பந்து வீசினர். நாங்கள் இன்னும் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். எங்கள் பேட்டிங் அற்புதமாக இருக்கிறது, அதனால் இந்த தோல்வியால் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. டி20 கிரிக்கெட்டில் இவ்வாறு நடப்பது சகஜம்தான். நாங்கள் அடுத்து எங்களுக்கு நன்கு தெரிந்த மைதானங்களுக்குச் செல்கிறோம், எனவே அது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. கடைசி 7 போட்டியில் 5ல் வெற்றிபெற்றோம். இன்னும் 2போட்டி உள்ளது. இந்த தோல்வியை மறந்து பிளே ஆப்பிற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

அணிக்காக முழு உழைப்பை களத்தில் கொடுக்கிறேன்;
ஆட்டநாயகன் ரபாடா கூறியதாவது: எனது பங்கு என்ன என்பதும் தெளிவாக உள்ளது. நான் அணிக்காக எனது முழு உழைப்பையும் களத்தில் கொடுக்கிறேன். நாம் ஆடுகளத்தின் தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப பந்துவீசுவதுதான் முக்கியம். நம் ஒவ்வொருவருக்கும் இயல்பான திறமைகள் உள்ளன. மேலும் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், ஒவ்வொரு போட்டியிலும் திறமையை வெளிப்படுத்துவது முக்கியம். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சற்று கடினமாக இருந்தது. இதனால் பொறுமையும் எளிமையும் கைகொடுத்தன, என்றார்.

Tags : Gujarat ,Shubman Gill ,Ahmedabad ,Gujarat Titans ,Sunrisers ,Hyderabad ,56th league ,IPL ,Ahmedabad, Gujarat ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னில் காலிறுதியில்...