×

ராய்ப்பூரில் இன்று ஆர்சிபி-கொல்கத்தா மோதல்

ராய்பூர்: ஐபிஎல் தொடரில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் இன்றிரவு நடைபெறும் 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன. 11போட்டியில் 7 வெற்றி, 4தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள ஆர்சிபி இன்று 8வது வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் கோஹ்லி கடைசி 2 போட்டியில் டக்அவுட் ஆனாலும் இதுவரை 379 ரன் அடித்துள்ளார். தேவ்தத் படிக்கல் 328, கேப்டன் ரஜத் படிதார் 326, டிம் டேவிட் 232 ரன் அடித்துள்ளனர். பவுலிங்கில் புவனேஸ்வர்குமார் (21விக்கெட்) மிரட்டி வருகிறார். ஹேசல்வுட், ராசிக்சலாம், சுயாஷ் வர்மா பவுலிங்கில் கைகொடுக்கின்றனர். ஆல்ரவுண்டர் குருணல் பாண்டியா 10 விக்கெட் எடுத்துள்ளதுடன் 296 ரன் அடித்து வலு சேர்த்துள்ளார்.

மறுபுறம் கேகேஆர் 10 போட்டியில் 4ல் வெற்றி, 5ல் தோல்வி ,ஒரு போட்டி ரத்து என 9 புள்ளியுடன் 8வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டியிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப்பிற்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. கடைசி 4போட்டியிலும் வென்றுள்ளது நம்பிக்கையை அதிகரிக்கும். பேட்டிங்கில் ரகுவன்ஷி (296), ரிங்கு சிங் (237), கேப்டன் ரகானே(218, பின் ஆலென்(210) பார்மில் உள்ளனர். பவுலிங்கில் சுனில் நரேன், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா, அனுகுல் ராய் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி இன்று களம் இறங்குவது சந்தேகம் தான். இரு அணிகளும் இதற்கு முன் 35 முறை மோதி உள்ளன. இதில் 20ல் கேகேஆர், 15ல் ஆர்சிபி வென்றுள்ளன.

Tags : RCB ,Kolkata ,Raipur ,Royal Challengers ,Bangalore ,Kolkata Knight Riders ,IPL ,Raipur, Chhattisgarh ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னில் காலிறுதியில்...