எலப்பாக்கம் ஊராட்சியில் கோழி கழிவுகளை மண்ணில் குழிதோண்டி புதைக்க வேண்டும்: சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

மதுராந்தகம்: எலப்பாக்கம் ஊராட்சியில் கோழி கழிவுகளை பொது வெளியில் கொட்டப்படுவது தினகரன் நாளிதழில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து மண்ணில் குழி தோண்டி புதைக்க வேண்டும் என கோழிக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எலப்பாக்கம் ஊராட்சி பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் கோழி இறைச்சி கடைகளில் உள்ள கோழி கழிவுகள் எலப்பாக்கம் அருகில் உள்ள ஆணை குன்னம் ஊராட்சி பகுதிகளில் பொது வெளியில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், அதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்று முன்தினம் புகைப்படத்துடன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாது. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை அச்சிறுப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் கன்னியப்பன் சதீஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாரதி உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது எலப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை சுகாதார அலுவலர்கள் நேரில் சந்தித்து கோழிக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை பொதுவெளி மற்றும் சாலையோரங்களில் கொட்டக்கூடாது, அவற்றை முறையாக சேகரித்து பாதுகாப்பான முறையில் மண்ணில் குழி தோண்டி புதைக்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் தமிழக சுகாதாரத் துறையின் மூலமாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
கோழி இறைச்சி கடைக்காரர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவுரை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: