விழுப்புரம், மே 13: விழுப்புரம் அருகே இட்லி சாப்பிட்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு லோடுமேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் கண்ணன்(46). லாரியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். இதனிடையே நேற்று காலை லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு புதுச்சேரி மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் இருந்த டிபன் கடையில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் லோடுமேன் கண்ணன் உள்ளிட்டவர்கள் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அதே லாரியில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வளவனூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
