அரசின் மானிய திட்டங்கள் பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் அவசியம்

மதுரை, மே 12: விவசாயிகள் அரசு வழங்கும் மானிய திட்டங்களை பெற வேண்டும் எனில், தனித்துவ அடையாள எண் அவசியம் என மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார் இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பு விவசாயிகள் அரசு மானியம் பெற தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம். எனவே இத்திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும், ஒரு வார காலத்திற்குள் அடையாள எண் பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் விதைகள் மற்றும் உரங்கள் உள்ளிட்டவற்றை பெற வேண்டும் என்றால், விவசாயிகள் தனித்துவ அடையாள எண் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இதனுடன் பயிர் காப்பீட்டு திட்டங்கள், இயற்கை பேரிடர் நிவாரண உதவி, விவசாயிகளுக்கான ஓய்வூதியம் கல்வி மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட அரசு வழங்கும் அனைத்து விவசாய நலத்திட்டங்களையும் அவர்கள் ஒரே ஐடி மூலம் பெற வேண்டும். இந்த அடையாள எண் பெறுவதற்கு தேவையான ஆதார் அட்டை, பட்டா, சிட்டா நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண் உள்ளிட்டவற்றுடன், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: